அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள தமிழ்நாட்டு எம்.பி.பி.எஸ் இடம் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்: மருத்துவதுறை அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023-24ம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடந்து முடிந்தது. 2021-22ம் கல்வியாண்டுக்கு முன்பு வரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் காலியாக இருந்தால், மீண்டும் அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு அந்த இடங்கள் நிரப்பப்படும். ஆனால் 2021-22ம் கல்வியாண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படாது என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. இந்த நடைமுறை வந்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத எம்.பி.பி.எஸ். இடங்கள் யாருக்கும் உபயோகம் இல்லாமல் அப்படியே கிடப்பில் இருந்து வந்தது.

அந்த வகையில் நடப்பாண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 50 இடங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 இடங்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சுயநிதி கல்லூரிகளில் 17 இடங்கள் என மொத்தம் 86 மருத்துவ படிப்புக்கான இடங்கள் காலியாக இருந்தன. இவ்வளவு இடங்கள் யாருக்கும் பயன்படாமல் போவதை பார்த்து கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். தமிழக அரசின் சார்பில், முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதமும் எழுதினார். இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள தமிழ்நாட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு எழுதிய நேர்முக கடிதத்தின் அடிப்படையில் 86 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி நிரப்பப்படும். அதன்படி, வருகிற 7ம் தேதி வரை அகில இந்திய கலந்தாய்வும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெறும். எனவே மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்த்து வர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு