ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

*விவசாயிகள் மகிழ்ச்சி

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து, முதல் போக நெல் சாகுபடிக்காக பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை, கோட்டூர், கோபாலபுரம், அம்பாராம்பாளையம், வேட்டைகாரன்புதூர், ரமணமுதலிபுதூர், காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு, ஆண்டும் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து விவசாயிகள், தங்கள் விளை நிலங்களை உழவு பணி மேற்கொண்டு நெல் சாகுபடி மேற்கொள்கின்றனர்.

கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதியன்று, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதியில் நெல் சாகுபடிக்காக, ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, முதுல் போகம் மற்றும் இரண்டாம் போகம் என இருபோகத்திற்கு அடுத்தடுத்து தண்ணீர் திறப்பு இருந்தது. இந்த, தண்ணீர் திறப்பு கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, நடப்பாண்டில், முதல் போக நெல் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் களம் இறங்கினர். இதற்கிடையே, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான, கருத்துருவும் அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அனுப்பி வைத்தனர். ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான உத்தரவு நேற்று முன்தினம் வரப்பெற்றது.

இந்நிலையில், நேற்று ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பை துவக்கி வைத்தனர். பின், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பூப்போட்டு மகிழ்ந்தனர். ஆழியார் அணையில் உள்ள சிறுபுணல் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர், பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால் வழியாக சென்றது.

இந்த தண்ணீர் திறப்பு வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதி வரை என தொடர்ந்து 136 நாட்களுக்கும் மொத்தம் 1020 மில்லியன் கன அடி திறக்கப்படுகிறது. இதன் மூலம், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட 5 வாய்க்கால்களின் மூலம் 6400 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்