மது போதை தகராறில் தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொலை: திருநங்கை உட்பட 3 பேரிடம் விசாரணை

சென்னை: கோடம்பாக்கத்தில் மது போதை தகராறில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் கன்னியப்பன் (40), கூலி தொழிலாளி. இவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தலையில் பலத்த காயங்களுடன் கன்னியப்பன் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த கோடம்பாக்கம் போலீசார், கன்னியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கன்னியப்பன் கடந்த 16ம் தேதி இரவு, அம்பேத்கர் சிலை அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்ட தடுப்புகள் அருகே, திருநங்கை உட்பட 4 பேருடன் மது அருந்தியதும், அதன் பிறகு கன்னியப்பனை தவிர மற்ற 3 பேர் மட்டும் அங்கிருந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து, போதையில் ஏற்பட்ட தகராறில் திருநங்கை உட்பட 3 பேர் கன்னியப்பனை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில், அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்