ரூ.44 கோடி, 66.8 ஏக்கர், 5,000 பார்வையாளர்கள்…அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கை ஜனவரி 23ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

மதுரை: அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 5,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கை வரும் ஜனவரி 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கென்று நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகளை 2023-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 66.8 ஏக்கரில் ரூ.44 கோடியில் ஒரே நேரத்தில் கிரிக்கெட் போட்டியை போல் 5 ஆயிரம் பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் இந்த அரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கில் செய்யப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், பொருட்கள் பாதுகாப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன.முதல் தளத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு அறைகள், உணவு அறை, தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் பொருட்கள் வைப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியைக் காண மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக மதுரை மட்டுமில்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் மூன்று வழித்தடங்களில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் அரண்மனை முகப்பு தோற்றம் போலவும் உட்புறத்தில் கிரிக்கெட் அரங்கம் போலவும் இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போட்டியைக் காண வரும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வாடிவாசல், காளைகளைக் கட்ட தனி இடம், மருத்துவ முகாம் மற்றும் வீரர்கள் ஓய்வறை போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கை வரும் ஜனவரி 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனிடையே அலங்காநல்லூரில் இவ்வாண்டு ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.

Related posts

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கம் பறிமுதல்..!!

விமானத்தில் பயணிப்பவர்கள் மட்டும் மனிதர்கள் அல்ல; வழியனுப்ப வருபவர்களும் மனிதர்கள்தான்: ஐகோர்ட் கிளை கருத்து

கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்பு பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கடுமையாக உழைப்பேன்