நில மோசடி வழக்கில் கைதான முன்னாள் மேலாளர் அழகப்பனுக்கு ஜாமீன் வழங்க நடிகை கவுதமி எதிர்ப்பு

சென்னை: நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகாரின்பேரில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் முன்னாள் மேலாளர் அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கவுதமி மனு அளித்தார். கவுதமியிடம் மேலாளராக பணியாற்றிய அழகப்பன், திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில், நடிகை கவுதமி மற்றும் அவரின் அண்ணன் காந்த்துக்கு சொந்தமான ரூ3.60 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து விற்றதாக கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இப்புகார் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து, நவ.9ம் தேதி நடிகை கவுதமி காஞ்சிபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி மோசடி செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்கள், இடத்தின் மதிப்பு, எப்போது வாங்கப்பட்டது உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்து விளக்கம் அளித்தார். அதனடிப்படையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த அழகப்பன் உள்ளிட்ட 6 பேரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், அழகப்பனை ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்த நிலையில், அதில் ஜாமீனில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 15ம் தேதி இரவு சென்னை வேளச்சேரியில் உள்ள வீட்டில் அழகப்பன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி அழகப்பன், தாக்கல் செய்திருந்த மனு நேற்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனால், நடிகை கவுதமி நேற்று காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என மனு அளித்தார். மேலும் அழகப்பனை போலீஸ் காவலில் விசாரிக்க போலீசார் 5 நாள் அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேனியில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு

செப் 09: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சொல்லிட்டாங்க…