மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என மோடி பேசியதால் மராட்டியத்தில் தோல்வி : ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு!!

மும்பை : பிரதமர் நரேந்திர மோடி மீது மராட்டிய கூட்டணி அரசின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மராட்டியத்தில் பாஜக 9, ஷிண்டே அணி 7, அஜித் பவார் அணி ஒரு இடத்தை மட்டுமே வென்றிருந்தனர். இந்தியா கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது. இதனிடையே ஜனாதிபதி மாளிகையில்கடந்த ஞாயிறன்று நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதையடுத்து ஒன்றிய அமைச்சரவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 7 எம்.பி.க்கள் வைத்துள்ள சிவசேனாவுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கி அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஷிண்டே கட்சி தெரிவித்தது.

இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஏக்நாத் ஷிண்டே ,”மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என மோடி பேசியதால் மராட்டியத்தில் பாதிப்பு ஏற்பட்டது. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பாஜகவினர் பிரசாரம் செய்தது, மக்களிடையே அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் போகிறார்கள் என்றும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றும் அச்சம் நிலவியது. இதனால் பாஜக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார். ஷிண்டேவின் பேச்சு மராட்டியத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து ஷிண்டே விலகினால் மகாராஷ்டிரத்தில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்படும்.அதேபோல், அஜித் பவார் தரப்பினரும் மத்திய இணையமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!