அகரமுதலி இயக்கக அகராதிகளை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்: அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தல்

சென்னை: அகரமுதலி இயக்கக அகராதிகளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கிருந்த மொழிஞாயிறு தேவநேய பாவாணரின் உருவ சிலைக்கும், படத்திற்கும் மலர் தூவியும் புகழ் வணக்கம் செலுத்தினர். அதுமட்டுமின்றி, அகரமுதலி இயக்கக செயற்பாடுகள், வெளியீடுகள், சொற்குவை திட்டத்தின் பரவலாக்கம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அவற்றை மேம்படுத்துவது குறித்து கலந்தாய்வு சென்னை எம்ஆர்சி நகரில் நடந்தது. இதில், எதிர்கால திட்டங்கள் குறித்து அலுவலர்களிடன் அமைச்சர் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியது: அகரமுதலி இயக்கக அகராதிகளை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு பொது நூலகங்கள் வழியாக மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மும்முரப்படுத்த வேண்டும். தமிழ்வளர்ச்சி துறை அலுவலகங்களான தமிழ்வளர்ச்சி இயக்ககம், உலகத்தமிழ் சங்கம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் உள்ள விற்பனை மையங்களில் இவ்வியக்கக அகராதிகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி கல்வி இயக்ககம் வழியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் அகரமுதலி இயக்கக அகராதிகளை வழங்குவதற்கும், அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பயிற்சி மையங்கள், அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் போன்ற இடங்களிலும் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

அகரமுதலி இயக்கக பொன்விழா ஆண்டை இந்தாண்டு தமிழ் அகராதியியல் நாள் விழாவோடு இணைத்து சிறப்பான முறையில் கொண்டாடவும், இவ்வியக்கக தமிழ் கலைக்கழகத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5லிருந்து 10ஆக உயர்த்தி அதன் செயற்பாடுகளை புத்தாக்கம் செய்ய வேண்டும். பொன்விழா ஆண்டை முன்னிட்டு அகரமுதலி நூல்களை 50 விழுக்காடு சிறப்பு கழிவில் விற்பனை செய்யவும், காலத்திற்கேற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட ஆங்கிலம் – தமிழ் அகராதி, தற்கால தமிழ் அகராதி ஆகியவற்றை உருவாக்கி வெளியிடவும், வருங்காலங்களில் இயக்கக வெளியீடுகள் அனைத்திலும் விரைவு துலங்கல் குறியீடு இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழில் உள்ள 70 விழுக்காடு சொற்களுக்கு வேர்ச்சொல் கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அப்பணியை 100 விழுக்காடு நிறைவு செய்ய வேண்டும்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு