Sunday, September 29, 2024
Home » ஐஸ்வரியத்தை தரும் காளிகாம்பாள் கவசம்

ஐஸ்வரியத்தை தரும் காளிகாம்பாள் கவசம்

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இந்த கவசத்தை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சொல்லி காளிகாம்பாளை வழிபாடு செய்து வந்தால், இன்னல்கள் நீங்கி வாழ்க்கையில் நமக்கு ஐஸ்வரியம் உண்டாகும்.

முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே
முக்கண்ணன் புதல்வனே மோதக ப்ரியனே
பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே
பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே

காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்
காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்
கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட
காத்தருள்வாயே கற்பகக் கணபதியே
அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்

ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
இகபர சௌபாக்கியம் அளித்திடும் தேவியே
ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
ஊழ்வினையைத் தீர்த்து உண்மையைக் காப்பவளே

எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே

ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்
அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே
கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே

கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே
கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே
பாரதிபாடிய பரமகல்யாணியே

வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே
வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்

மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து
சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே
எங்கும் நிறைந்திருந்து எமபயம் நீக்கிடுவாய்
எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு
தந்திடுவாய்
குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்
காத்திடுவாய்

சங்காபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்
காத்திடுவாய்
சத்தியமாய் இருப்போர்க்குச் சாட்சியாய்
இருந்திடுவாய்
வித்தைகள் கற்போர்க்கு விளக்கம்
தந்திடுவாய்

கரும்பேந்திய கையினளே கண்ணினைக்
காத்திடுவாய்
விரும்பியே வருவோர்க்கு வீரத்தை
அளித்திடுவாய்
நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்
கொடுத்திடுவாய்
பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய்
இருந்திடுவாய்
மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம்
காத்திடுவாய்
நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்
காத்திடுவாய்

நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம்
அளித்திடுவாய்
வம்பு பேசுவோரையும் வரமளித்துக்
காத்திடுவாய்
கும்பிட வருவோரின் குறைகளைக்
களைந்திடுவாய்

பாமாலை சூட்டுவோர்க்குப் பூமாலை
சூட்டிடுவாய்
காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்
ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்
தேடி வருவோர்க்குத் தைரியத்தை
அளித்திடுவாய்

வாடி வருவோரின் வறுமையைப்போக்கிடுவாய்
நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
பாடி வருவோரின் பாரத்தைப் போக்கிடுவாய்
கூடிவருவோர்க்குக் குலவிளக்காய்த்
திகழ்ந்திடுவாய்
காளிகாம்பாள் கவசம் ஓதுவோர்க்கெல்லாம்
கஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே

அஷ்டமா சித்தியும் அடைந்திடச்செய்யுமே
நஷ்டம் என்பதே எதிலும் வராமல்
இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்
செய்யுமே
போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
போற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி
போற்றி போற்றி அங்கயற்கண்ணியே போற்றி
போற்றி போற்றி மூகாம்பிகை அன்னையே
போற்றி

தொகுப்பு: அனுஷா

You may also like

Leave a Comment

19 − seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi