ஏர்வாடி அருகே கோதைசேரியில் வாறுகால் வசதி இல்லாததால் சுகாதார சீர்கேடு

*கொசு தொல்லையால் மக்கள் அவதி

ஏர்வாடி : ஏர்வாடி அருகே கோதைசேரியில் பத்திரகாளி அம்மன் கோவில் தெரு, பஜனைமடம் வடக்கு தெரு ஆகிய தெருக்களில் சுமார் 150 வீடுகள் உள்ளன. இதில் பத்திரகாளி அம்மன் கோவில் தெரு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள தெருக்களின் வழியாக வெளியே செல்கிறது. இப்பகுதியில் வாறுகால் அமைக்க புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை அமைக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி கொசுக்களின் உற்பத்தி கூடமாக மாறியுள்ளது.

இதனால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை சுகாதார சீர்கேட்டினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் வாறுகால் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆறுமுகம் கூறுகையில், நாங்கள் இப்பகுதியில் வாறுகால் அமைக்க கோரி 3 வருடங்களாக பஞ்சாயத்திலும், யூனியன் ஆணையரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

கடந்த கிராமசபை கூட்டத்திலும் மனு அளித்துள்ளோம். இதுவரை வாறுகால் அமைக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தெருக்களில் பேவர் பிளாக் கல்லை பதித்து பாதியில் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் கழிவுநீர் பேவர் பிளாக் கற்களின் இடைவெளி வழியாக தெரு முழுவதும் பரவிகிடப்பதால் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் மழைக்காலத்திற்கு முன்பாக வாறுகாலை அமைக்க வேண்டும் என்றார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்