விமானத்தில் வெந்து நூடுல்சான பயணிகள்; வியர்வையை துடைக்க ‘டிஷ்யூ’ பேப்பர் கொடுத்த அவலம் ‘ஏசி’ போடாததால் காங். தலைவர் ஆவேசம்

ஜெய்ப்பூர்: விமானத்தில் ‘ஏசி’ போடாததால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு வியர்வையை துடைக்க ‘டிஷ்யூ’ பேப்பர் கொடுத்த சம்பவம் குறித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் கடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் வெளியிட்ட பதிவில், ‘சண்டிகரில் இருந்து ஜெய்ப்பூருக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தோம். விமானம் புறப்படுவதற்கு முன், பயணிகள் அந்த விமானத்தில் அமரவைக்கப்பட்டனர். விமானத்தில் குளிர்சாதன இயந்திரத்தை (ஏர் கண்டிஷனிங்) இயக்கவில்லை.

விமானம் புறப்பட்ட உடன் ஏசி இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லை. விமானம் புறப்படும் முன் 15 நிமிடங்கள் வரை வெப்பத்தில் அமர்ந்திருந்த நிலையில், விமானம் புறப்பட்ட பின்னரும் கூட ஏசி இயக்கப்படவில்லை. அதனால் கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் கடும் வெப்பத்தில் சிரமப்பட்டனர். விமானம் டேக் ஆஃப் ஆனது முதல் ஜெய்ப்பூரில் தரையிறங்கும் வரை ஏசிகள் அணைக்கப்பட்டு இருந்தன. பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பியும், யாரும் கண்டுகொள்ளவில்லை.

பயணிகள் தங்களது உடம்பில் இருந்து வெளியேறிய வியர்வையில் நனைந்தபடி இருந்ததை பார்த்து, அங்கிருந்த விமான பணியாளர்கள் வியர்வையை துடைப்பதற்காக ‘டிஷ்யூ’ பேப்பர்களை விநியோகித்தனர். அதில்தான் பயணிகள் தங்களது வியர்வையைத் துடைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இவ்விவகாரத்தில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் இன்ஜின் ஒன்று பழுதடைந்ததால், அந்த விமானம் பாட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி