உலகளாவிய பாதுகாப்பு சூழலுக்கு ஏற்ப 2032க்குள் விமானப்படை சிறந்ததாக மாற வேண்டும்: 91வது விமானப்படை தினத்தில் ஏர் மார்ஷல் சவுதாரி வலியுறுத்தல்

பியராக்ராஜ்: மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சூழலில், 2032ம் ஆண்டுக்குள் இந்திய விமானப்படை சிறந்த ஒன்றாக இருக்க வேண்டுமென 91வது விமானப்படை தினத்தில் தலைமை ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுதாரி வலியுறுத்தினார். இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், 91வது விமானப்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடந்த விழாவில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதாரி பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்திய விமானப்படை வெறும் ராணுவப் படை மட்டுமல்ல, இந்தியாவின் கூட்டு வலிமை மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம். நமது விமானப்படையை அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகம் மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு சூழலின் மாறுதலுக்கு ஏற்ப நாம் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

எனவே எதிர்கால போர்களை சந்திக்கும் அளவுக்கு விமானப்படையை மேம்படுத்த வேண்டும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் பாதையில் இந்தியா பயணிக்கையில், 2032ல் 100 ஆண்டுகள் நிறைவு செய்வதற்குள் இந்திய விமானப்படை உலகின் சிறந்த படையாக இருக்க வேண்டும். அதற்காக அர்ப்பணிப்பு, கூட்டுத்திறனை பயன்படுத்தி நாம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும்’’ என்றார்.

*புதிய கொடி அறிமுகம்
72 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த விமானப்படையின் அதிகாரப்பூர்வ கொடிக்கு பதிலாக புதிய கொடியை சவுதாரி அறிமுகம் செய்து வைத்தார். இந்த கொடியில் தேசியக்கொடி, மூவர்ண வட்டங்களுடன் சிறகுகளை விரித்த இமயமலைக் கழுகும், அதன் கீழே தேவநாகரியில் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற வாசகமும், கழுகை சுற்றி ‘பாரதிய வாயு சேனா’ என்ற வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.

Related posts

டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

கள்ளக்குறிச்சி உயிரிழப்பை வைத்து கபட நாடகமாடுகிறார் எடப்பாடி: கருணாஸ் தாக்கு

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு