இந்தோனேசியா பயணிக்கு உடல் நலம் பாதிப்பு: ஏர் ஏசியா விமானம் சென்னையில் தரையிறக்கம்

மீனம்பாக்கம்: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று மாலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் 278 பயணிகளுடன் புறப்பட்டது. நேற்றிரவு சென்னை வான்வெளியை கடந்தபோது, இந்தோனேசிய பயணி புஹாரி ஜிண்டோ (64) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அலறி துடித்தார். உடனே பணிப்பெண்கள், விமான கேப்டனுக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். அப்போது, சென்னை விமான நிலையம்தான், அருகில் இருப்பது தெரியவந்தது.

உடனே தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் சென்னை அதிகாரிகள் தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தனர். அங்கிருந்து, தரையிறங்க அனுமதி கிடைத்ததும் இரவு 10.30 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக ஏர் ஏசியா பயணிகள் விமானம் தரையிறங்கியது. உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர், விமானத்துக்குள் ஏறி, பயணியை பரிசோதித்தனர்.

உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அவருக்கு இந்தியாவில் இறங்குவதற்கு விசா இல்லை. இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், மனிதாபிமான அடிப்படையில், அவசரகால மருத்துவ விசா வழங்கினர். பின்னர் கீழே இறக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தகவல் இந்தோனேசியா நாட்டு தூதரகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஏர் ஏசியா விமானம், 277 பயணிகளுடன் இரவு 11.50 மணிக்கு கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.

Related posts

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வருவதால் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுப்பு