சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்: விமான சாகச நிகழ்ச்சி குறித்து கனிமொழி வருத்தம்

சென்னை: சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என விமான சாகச நிகழ்ச்சி குறித்து கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் (06.10.2024) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன. இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விமான சாகசங்களைக் கண்டு களித்தனர்.

இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமான சாகச நிகழ்ச்சியின் போது வெயில் தாக்கம் காரணமாக 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதோடு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியது.முன்னதாக வான் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த பார்வையாளர்களில் பலர் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

விடுமுறையை முன்னிட்டு சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்

கோவை அவிநாசி சாலையில் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!!