பாஜவுடன் அதிமுக ரகசிய உறவா? ஐயோ… பிளீஸ் இனிமே இத கேட்காதீங்க: கெஞ்சாத குறையாக எடப்பாடி பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த விழாவில் மாற்று கட்சிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பாரதிய ஜனதாவுடன் மறைமுகமாக அதிமுக உறவு வைத்துள்ளதாக மீடியாக்களில் கூறி வருகிறார்கள். 25.09.2023 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில், ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று தெளிவாக கூறி விட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இல்லை என்று கூறி விட்டோம்.

தற்போது, இந்த விழாவின் வாயிலாக இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறேன், பாஜவுடன் அதிமுக கூட்டணி இல்லை.. இல்லை.. இனி எந்த இடத்திலும் அதிமுக, பா.ஜ.வுடன் கூட்டணியா என்று கேட்க வேண்டாம். நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்களுடன் கூட்டணி வைக்கிறோம். அவர்களே எங்களின் எஜமானர்கள். அதிமுக சாதி-மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. மக்களை நேசிக்கும் கட்சி. இந்த கட்சியில் கடைக்கோடி தொண்டனும் உயர் பொறுப்புக்கு -பதவிக்கு வரலாம். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் கட்சியாக அதிமுக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும். உரிய நேரத்தில் அதை தெரிவிப்போம். தேர்தலில் அதிமுகவுக்கும், அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இவ்வாறு எடப்பாடி பேசினார்.

 

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு