அதிமுக ஆட்சியில் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு கொடுத்த அரசு நிலத்தை மீண்டும் கையகப்படுத்தியது சரிதான்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: அதிமுக ஆட்சியில் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்ட அரசு நிலத்தை, மீண்டும் அரசு கையகப்படுத்தியது சரிதான் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டை ஒட்டியுள்ள அமைந்தகரை தாலுக்காவில் பூந்தமல்லி சாலையில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியில் பாஷ்யம் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட்டது. சதுர அடி ரூ.13,500 என மிக குறைந்த விலைக்கு பாஷ்யம் நிறுவனத்துக்கு விற்பனை செய்து கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பாஷ்யம் கட்டுமான நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கியதில் விதிமீறல் நடந்தது என ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். குறிப்பாக நிலத்தை முறைகேடாக ஒதுக்கீடு செய்த பழனிசாமி, பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இதனிடையே திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து 2022ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி திருத்தி அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு நடைபெற்றது. மனுவில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி மனுதாரர் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு மீட்டது சரியே. அதாவது, பாஷ்யம் கட்டுமான நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது சரியே என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நிலத்தை முழுமையாக மீட்டு வேலி அமைத்து பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், அரசு நிலத்தை அபகரிக்க உடந்தையாக செயல்பட்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அரசு நிலத்தை அபகரிக்க திட்டமிட்ட ஊழல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அரசு நிலத்தை சட்டவிரோதமாக அபகரிப்பதை தடுக்க தகுந்த சட்டத்தை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதனிடையே, நிலத்தை முறைகேடாக ஒதுக்கீடு செய்த பழனிசாமி, பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடுத்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. நிலம் ஒதுக்கியதில் முதல்வராக இருந்த பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பி.எஸ். வருவாய் அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் கூட்டுச்சதி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலாவதற்கு முன் அவசர கதியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு முறைகேடாக நிலம் ஒதுக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரசு நிலத்தில் அடுக்குமாடி. கட்டடம் கட்டி ரியல் எஸ்டேட் வணிகத்துக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என புகார் அளிக்கப்பட்டது.

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்