அதிமுக ஆட்சியில் ஏரி, குளங்கள், குட்டைகளை தனியாருக்கு பதிவு செய்த மாவட்ட பதிவாளர் சிவப்பிரியா டிஸ்மிஸ்: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏரி, குளங்கள், குட்டைகள், நீர்வழி தடங்களை, தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதுபோல பட்டா பதவி செய்ததாக புகார்கள் எழுந்தது. அப்போதே இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், சைதாப்பேட்டையில் மாவட்ட பதிவாளராக இருந்த சிவப்பிரியா மீது விசாரணைக்கு உத்தரவிட்டனர்.அதைத் தொடர்ந்து, மாவட்ட தணிக்கை பதிவாளர் சித்ரா விசாரணை நடத்தினார்.

விசாரணையில் 150 ஏரி, குளங்கள், குட்டைகளை அவர் பெயர் மாற்றம் செய்து தனியாருக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தான் மாவட்ட பதிவாளர் சிவப்பிரியா பெயர் மாற்றம் செய்திருந்தார். இது குறித்து சித்ரா, அரசுக்கு அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையைத் தொடர்ந்து அவரை, பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும் இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல, தென் சென்னை உதவி ஐஜி சத்தியப்பிரியாவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவரும் விசாரணை நடத்தி, அவர் போலியாக பதிவு செய்திருந்தது உண்மை என்று தெரியவந்தது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசின் நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சிவப்பிரியா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரைகளை அடுத்து அவரை டிஸ்மிஸ் செய்து, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கூத்துப் பட்டறை அறங்காவலர் நடேஷ் காலமானார்

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்