அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கிராமப்புற ஏழைகளுக்கான உணவை உறுதி செய்வதற்கென்று பல்வேறு திட்டங்கள் இருந்து வருகிறது. அதே நேரத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு 3 வேளை உணவை உறுதிப்படுத்த, கடந்த 2013 மார்ச் 13ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் முதன்முறையாக மலிவு விலை அம்மா உணவகங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

பின்னர் இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கும் மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதில், சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் இருக்கும் 200 வார்டுகளுக்கு 2 உணவகங்கள் விகிதம் 400 உணவகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது, சென்னையில் மொத்தம் 392 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. எதிர்க்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்றாலும், மக்கள் பசியை ஆற்றி வரவேற்பை பெற்ற திட்டம் என்பதால், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், அம்மா உணவகங்கள் அனைத்தும் அந்த பெயரிலேயே தொடர்ந்து செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு, அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், அம்மா உணவகங்கள் அனைத்தும் புத்துயிர் பெற இருக்கின்றன. எனவே, சென்னை மாநகராட்சியின் இம்முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்டிடங்களில் உள்ள விரிசல்களை சரி செய்வது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, முறையான கழிவுநீர் கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மேலும் 2013ல் அம்மா உணவகங்களுக்காக வாங்கப்பட்ட குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மிக்சி போன்றவை பழுதாகி கிடக்கும் நிலையில் அவற்றுக்கு பதிலாக புதியதாக வாங்கவும் திடடமிட்டுள்ளது. சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களை அதிகளவில் வரவழைக்க அம்மா உணவகத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உணவகங்கள் பற்றி புகார் வந்து, அவப்பெயர் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் மலிவு விலைக்கு உணவுகள் வழங்கப்படுவதால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் மொத்தம் உள்ள 392 அம்மா உணவகங்களில் 3100 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினக்கூலியை உயர்த்தி தர கோரி சுமார் 8 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் மேயர் பிரியா தலைமையில் நடந்த மாமன்ற கூட்டத்தில் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அம்மா உணவகத்தில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தினக்கூலியை ரூ.300ல் இருந்து ரூ.325 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று நேற்று அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், ‘‘அம்மா உணவகத்தில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தினக்கூலியை ரூ.300ல் இருந்து ரூ.325 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் ஏப்ரல், மே மாதத்திற்கான ஊதிய உயர்வை அரியர்ஸ் தொகையாக ஊழியர்களுக்கு விடுவிக்க வேண்டும். இந்த ஊதிய உயர்வு மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி கூடுதல் செலவாகும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். 8 ஆண்டுகள் கழித்து ஊதிய உயர்வால் சுமார் 3100 ஊழியர்கள் இதன் மூலம் பயன்பெற இருக்கின்றனர். சென்னையில் பல்வேறு பகுதிகளில் முக்கியமாக கூலி தொழிலாளர்களுக்கு அம்மா உணவகம் மிகவும் பயனுள்ளதாக தற்போது வரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்