அதிமுக ஆட்சியின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது திமுக பேதம் பார்க்கும் பண்பு திமுகவிடம் எப்போதும் இல்லை

* அம்மா உணவு திட்டத்தை முதல்வர் சிறப்பாக செயல்படுத்துகிறார்
* எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பதிலடி

சென்னை: பேதம் பார்க்கும் பண்பு திமுகவிடம் எப்போதும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைமை பதிலளித்துள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக நிறைவேற்றிய திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது என்றெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறை சொல்லியுள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் திமுக ஆட்சி, அம்மா உணவுத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. அம்மா உணவகத்தில் ஆய்வு செய்து, அம்மா உணவகங்ளுக்குத் தேவையான பணிகளுக்காக உடனடியாக ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

எந்த ஒரு திட்டத்தையும் இது யார் கொண்டு வந்த திட்டம், எந்தக் கட்சி கொண்டு வந்த திட்டம என்று பார்ப்பது திமுகவிடம் இல்லை. இதேபோல் முன்பு, சத்துணவுத் திட்டத்தை திமுக மூடிவிடும் என்றார்கள். ஆனால் சத்துணவு திட்டத்தில் 1989ல் இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை சேர்த்து அதை சத்தான திட்டமாக வழங்கியது திமுக. 1996ல் நான்காவது முறையாக கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி மீண்டும் அமைந்தது. அந்தக் காலகட்டத்தில் சத்துணவுடன் குழந்தைகளுக்கு வாரம் 5 முட்டைகள் வழங்கி அத்திட்டத்திற்கு மேலும் சிறப்புச் சேர்த்தவர் கலைஞர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் 2001ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதிமுக கொண்டு வந்த திட்டம் என எண்ணாமல் 2006ல் ஆட்சிக்கு வந்த திமுக 2006-2007 முதல் 5 ஆண்டுகளிலும் கலைஞர் ஆட்சியில் ஆதிதிராவிடர்- தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் இனத்தினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உட்பட இதர பல வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் விரிவுபடுத்தி 19 லட்சத்து 54 ஆயிரத்து 627 மாணவ மாணவியர்க்கு ரூ.465 கோடியே 91 லட்சம் செலவில் இலவச மிதி வண்டிகள் வழங்கப்பட்டன என்பது வரலாறு.

அதிமுக ஆட்சி முடக்கிய திமுக ஆட்சியின் திட்டங்கள் பல. அண்ணா நூற்றாண்டு நினைவாக ரூ.172 கோடியில் திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் 8 தளங்களுடன் பிரம்மாண்டமாக உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சிதைத்தவர்கள் அதிமுகவினர். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சட்டமன்ற – தலைமைச் செயலகக் கட்டிடத்தை மாற்றி அமைத்து ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றினார்களே அதை மறந்து விட்டாரா எதிர்க்கட்சித் தலைவர்? வள்ளுவர் கோட்டத்தை முறையாகப் பராமரிக்காமல், சிதைத்தார்களே. துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத்தை முடக்கினார்களே. பண்பாட்டுச் சின்னம் கண்ணகி சிலையை அகற்றினீர்களே.

சிவாஜி கணேசனுக்கு கலைஞர், கடற்கரைச் சாலையில் நிறுவிய சிலையை அகற்றியதும் நீங்கள் தானே. 10,000 சாலைப் பணியாளர்கள் வாழ்வைக் குலைத்தவர்கள், செம்மொழிப் பூங்காவை சிதைத்தவர்களா பேசுவது? தொல்காப்பியர் பூங்காவை உருக்குலைத்ததும் அதிமுக ஆட்சிதானே. இவை மட்டுமல்ல திமுக ஆட்சி கொண்டு வந்த, “நமக்கு நாமே திட்டம், திமுக நடைமுறைப்படுத்திய, “அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரத் திட்டம், உழவர் சந்தை திட்டம், மக்கள் பிரச்னைகளை தீர்த்த, “மனுநீதி திட்டம், கலைஞர் “காப்பீட்டுத் திட்டம், சமச்சீர் கல்வி திட்டம், மினி பஸ் திட்டம் முதலான திட்டங்களையெல்லாம் சிதைத்தது யார் என்பதையும் மறந்து விட்டாரா? தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி மாநிலமாக உயர்த்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சலால் வாய்க்கு வந்ததை எல்லாம் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிப் புலம்புகிறார் எதிர்க்கட்சித் தலைவர். ஏமாற்றாதே ஏமாறாதே என்ற பாடலின் தொடர்களையே நினைவுபடுத்துகிறோம்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்