அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீட்டில் இடைக்கால உத்தரவு இல்லை: ஐகோர்ட் அதிரடி

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மேல்முறையீட்டு மனுவில், 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்னை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்துள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ராஜலட்சுமி பிரகாஷ் ஆஜராகினர். இரட்டை இலை சின்னத்தை தனது தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது. இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க கூடாது என்று அரவிந்த் பாண்டியன் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தை மனுதாரர் அணுக தடையில்லை. இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி