கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக வரிவசூல் செய்யாததால் மாநகராட்சிக்கு ரூ.74 லட்சம் இழப்பு: தணிக்கை குழு தலைவர் தகவல்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டல கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழு ஆய்வு கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நிலைக்குழு தலைவர் க.தனசேகரன் தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் நந்தகோபால் வரவேற்றார். மண்டல உதவி ஆணையர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிலைக்குழு உறுப்பினர்கள் சாரதா, பாரதி தனலட்சுமி, வி.ராஜகுமாரி, மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டு வரிவிதிப்பு, நிலுவையில் உள்ள சொத்துவரி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில் தணிக்கைக்குழு தலைவர் க.தனசேகர் கூறுகையில், ‘மாதவரம் மண்டலத்தில் 2020-21ம் நிதியாண்டில் 517 சொத்து வரி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளில் ரூ.68 லட்சத்திற்கு மேல் சொத்து வரி நிலுவை உள்ளது.

இந்த தொகையை வசூலிக்காமல் சம்மந்தப்பட்ட கணக்கு எண்கள் நீக்கப்பட்டது விதிமுறைகளுக்கு புறம்பானது. இதற்காக பெறப்பட்ட ஆணை குறித்த விவரங்களை தணிக்கை குழுவிற்கு அளிக்க கேட்டுள்ளோம். அதேபோல் 2020-21ம் ஆண்டு வரை 1541 சொத்துவரி கணக்குகள் வசூலிக்கப்படாத இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வரவேண்டிய வரியை முறையாக வசூல் செய்யாததால், சென்னை மாநகராட்சிக்கு ரூ.74 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எதனால் வரிவசூல் செய்யப்படவில்லை என்பதை தணிக்கை குழுவிற்கு அறிக்கை அளிக்க கேட்டுள்ளோம். வரி கணக்கு நீக்கப்பட்டது மற்றும் வரிவசூல் செய்யாதது குறித்து முறையாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்,’ என்றார்.

Related posts

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை