அதிமுக ஆட்சியில் கேபிள் சீரமைப்பு டெண்டரில் மோசடி: மின்துறையின் ஓய்வு பெற்ற இயக்குனர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

சென்னை: தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு கழகத்தின் முன்னாள் இயக்குனர் மீது டெண்டர் மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தின் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரவிச்சந்திரன். இவர், கடந்த 2016ம் ஆண்டு மற்றும் 2017ம் ஆண்டில் தலைமை பொறியாளராக தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் இருந்தபோது கடப்பேரி முதல் சிஎம்ஆர்எல் வரையும் மற்றும் தரமணியில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் வரை கேபிள் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் பதிக்கப்பட்ட 230 கிலோ வாட் கேபிளில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அதில் சீரமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக, டெண்டர் அடிப்படையில் பார்வதி மருத்துவமனை பகுதியில் கேபிளில் பழுது பார்த்து சீரமைப்பதற்காக சேலத்தைச் சேர்ந்த பவர் டிரான்ஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.23 லட்சத்து 47 ஆயிரமும் மற்றும் கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகே கேபிள் பழுது மட்டும் சீரமைப்பதற்கு ரூ.22 லட்சத்து 93 ஆயிரம் டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், இதே கேபிள் பதித்த தடங்களில் 6 இடங்களில் பழுது மற்றும் சீரமைப்பதற்கு உண்டான பணி இருந்ததாகவும், அதற்கு மேலும் ரூ.30 லட்சம் முதல் 60 லட்சம் வரை செலவாகும் என கூறி, டெண்டர் விதிகளை பின்பற்றாமல் அதே சேலம் மற்றும் சென்னை தனியார் நிறுவனங்களுக்கு டெண்டரை ஒதுக்கியதில் மோசடி செய்தது தெரியவந்தது.

குறிப்பாக, விதியின்படி பழுது பார்ப்பதற்கும், மாற்றி அமைப்பதற்கும் பொறியாளர்கள் மேற்கொள்வது கிடையாது. மேலும் கேபிள் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கடப்பேரி முதல் சிஎம்ஆர்எல் வரை பதிக்கப்பட்ட கேபிளுக்கு 36 மாதம் உத்தரவாத காலமும், தரமணி முதல் ராஜா அண்ணாமலைபுரம் வரை பதிக்கப்பட்ட கேபிளுக்கு 60 மாதம் உத்தரவாத காலமும் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இலவசமாகவே பழுது பார்க்கவும், சீரமைக்கவும் கேபிள் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவை அணுகியிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டு தலைமை பொறியாளராக இருந்த ரவிச்சந்திரன் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி மோசடியில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தின் இயக்குனராக இருந்தபோது 2020ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற டெண்டர் முறைகேடுகள் ரவிச்சந்திரன் பணியாற்றிய காலத்தில் நடந்ததா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்