கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் அதிமுக ஆட்சி காலத்தில் கள்ள சாராயம் காய்ச்சி விற்றனர்: வனத்துறை அமைச்சராக இருந்தபோது நானே நேரில் பார்த்தேன்; திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல்

திண்டுக்கல்: அதிமுக ஆட்சி காலத்தில் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டது, நானே நேரில் பார்த்தேன் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் சார்பில், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக, நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ‘‘திண்டுக்கல் சிறுமலையை போலவே, கள்ளக்குறிச்சியில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, அந்த மலைக்கு போனேன். அங்கு எங்கு பார்த்தாலும் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. உடன் வந்தவர்களிடம் என்னவென்று கேட்டேன். அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக சொன்னார்கள். இதை நான் நேரில் பார்த்தேன்’’ என்று பேசினார்.

திண்டுக்கல் சீனிவாசன் பேசியதைக் கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் அதிமுக காலத்திலேயே அங்கு நடந்துள்ளது என அப்போதைய அதிமுக அமைச்சரே ஒப்புக் கொள்கிறார். தவிர, ஏன் அதை அப்போது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், இப்போது மக்களை ஏமாற்ற ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என அதிருப்தி தெரிவித்தனர்.

* ‘CPI’ விசாரணை கேட்கும் அதிமுக கலாய்க்கும் நெட்டிசன்கள்
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் எதிரே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் கண்டன பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர். பதாகையில் விசாரணை வேண்டும்…

விசாரணை வேண்டும்… CPI விசாரணை வேண்டும்… என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. CBI என்பதற்கு பதில் CPI என்று கட்சியின் பெயர் இடம்பெற்றிருந்ததைப் பார்த்துவிட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிரித்தபடி சென்றனர். அதிமுக போராட்டத்தில் நடந்த இந்த நகைச்சுவை நிகழ்வு குறித்த வீடியோவை நெட்டிசனகள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கலாய்த்து வருவது வைரலாகி வருகிறது.

Related posts

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் இன்று ஆய்வு

அடையாறில் திடீரென பஸ் தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் உயிர் தப்பினர்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினர் செயல்பட கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எடப்பாடி ரகசிய உத்தரவு