எங்கு பாதிப்பு இருக்குனு காட்ட சொல்லுங்க… அதிமுக ஆட்சியில்தான் டெங்கு இறப்புகள் அதிகம்: எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

கோவை: ‘தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு இல்லை. அதிமுக ஆட்சியில்தான் டெங்கு இறப்புகள் அதிகம்’ என்று எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி தந்து உள்ளார். கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பருவமழைக்கு முன்பு சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட காய்ச்சல் இருக்கும் பகுதிகளில் முகாம் அமைக்கப்படும். அதன்படி, வரும் 15ம் தேதிக்கு பின் தொடர்ந்து மழை பெய்தால் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்படும். கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பரில் தினமும் முகாம் நடத்தினோம். அதுபோன்ற அவசியம் ஏற்பட்டால் முகாம் நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

‘‘மலேரியா, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவில்லை’’ என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்று கேட்டபோது, ‘‘எங்கு டெங்கு இருக்கிறது என அவரை காட்ட சொல்லுங்கள். அவர்கள் ஆட்சியின்போதுதான் டெங்கு உயிரிழப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளது. 2012ல் டெங்கு இறப்பு 66 பேர், 2017-ல் 65 பேர். இதுதான் தமிழக வரலாற்றில் அதிகபட்சமான டெங்கு இறப்பு. அதன்பிறகு எல்லாம் சிங்கிள் டிஜிட் இறப்புதான். இப்போது 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் டெங்குவால் 6 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

இந்த 6 பேர் கூட தனியார் மருத்துவமனையில் இருந்தும், வீடுகளில் சிகிச்சை பெற்றவர்களும், நோய் எதிர்ப்பு குறைவாக இருந்தவர்களும்தான். டெங்கு பாதிப்புடன் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் 100 சதவீதம் காப்பாற்ற முடியும். 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், அவரது கட்சி தலைவர் ஆட்சியில் இருந்தபோதுதான் டெங்கு இறப்பு நடந்தது. எனவே, 2012, 2016-ல் டெங்கு இறப்பு எவ்வளவு என அவர்களிடம் நீங்கள் கேட்கலாம். தமிழ்நாட்டில் எங்கும் டெங்கு பாதிப்பு இல்லை. பொதுமக்கள் பதற்றம் அடைய தேவையில்லை’’ என்று அமைச்சர் கூறினார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு