மாநிலம் முழுவதும் வரும் 29ம் தேதி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மாநிலம் முழுவதும் வருகிற 29ம் தேதி தமிழகத்தில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்து அதிமுக சார்பில், வருகிற 29ம் தேதி (திங்கள்) காலை 10 மணியளவில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்கள் முன்பும், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்