மதுபோதையில் ரகளை போலீசாரை தாக்கிய அதிமுக ஊராட்சி தலைவர் கைது

கலவை: ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த சிட்டந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (53). அதிமுகவை சேர்ந்த இவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த 7ம் தேதி நள்ளிரவு திமிரி- கலவை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே உமாபதி தனது ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் மது போதையில் ரகளை செய்து கொண்டிருந்தாராம். தகவலறிந்த திமிரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், போலீசார் வருவதற்குள் உமாபதி தவிர மற்ற அனைவரும் கலைந்து சென்றனர். எனவே, போலீசார் உமாபதியை அங்கிருந்து செல்லும்படி கூறினர்.

ஆனால், அவர் ஏற்க மறுத்து போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த சப்- இன்ஸ்பெக்டர் அருண்குமாரையும் ஆபாசமாக திட்டி, `இங்கிருந்து செல்ல முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்’ என உமாபதி கூறினாராம். அப்போது, அவரை சமாதானம் செய்து அனுப்ப முயன்ற போலீசாரை கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உமாபதியை திமிரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.தொடர்ந்து, வழக்கு பதிந்து உமாபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!