போலி ஆவணம் தயாரித்து ரூ.20 கோடி நிலம் மோசடி அதிமுக ஊராட்சி தலைவியை பதவி நீக்க நடவடிக்கை: திருவாரூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தை சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்து, ரூ.20 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளனர். இந்த மோசடியில் அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவி அமுதா உள்ளிட்ட பலருக்கு பங்கு உள்ளது.

எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்,’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிசிஐடி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஊராட்சி மன்ற தலைவி அமுதா இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக தொடங்க வேண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும், அமுதாவை கைது செய்வதற்கான நடவடிக்கையை சிபிசிஐடி தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா: விலகினார் மர்ரே

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 சிறை அலுவலர், 44 உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

யூரோ கோப்பை கால்பந்து சுலோவேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல்: பெனால்டி ஷூட் அவுட்டில் அசத்தல்