நாடாளுமன்ற பாதுகாப்பில் குறைபாடு; ஒன்றிய அரசை கண்டித்து அதிமுக பொதுக்குழு தீர்மானம்: தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கவும் வலியுறுத்தல்


சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சட்ட விதிகளின்படி ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டமும், 2 முறை செயற்குழு கூட்டத்தையும் நடத்தப்பட வேண்டும். அந்தவகையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறயைாக அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று காலை 10.35 மணியளவில் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற தனியார் மண்டபத்தில் முகப்பு வாயிலில் நாடாளுமன்ற கட்டிடத்தை போல பிரம்மாண்ட கட் அவுட் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய இசை நடனங்கள், குதிரை படை, பேண்டு, வாத்தியம், பூரணகும்ப மரியாதை என உற்சாக வரவேற்புக்கிடையே எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வந்தடைந்தார்.

ஏற்கனவே, தலைமைக்கழகத்தின் சார்பில் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு நிர்வாகிகள், மகளிர் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட 2800 பேருக்கு பொதுக்குழுவின் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பொன்னையன், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் மேடையில் குழுமியிருந்தனர். இந்தகூட்டத்தின் தொடக்கத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் வரவேற்புரையாற்றிய பின்னர் கட்சியின் மறைந்த மூத்த நிர்வாகிகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டன. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுக்குழு தீர்மானத்தை வாசித்தார். அதன் விவரம் பின்வருமாறு:
* தாய் மொழியாம் தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மாநில மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை கொண்டுவர வலியுறுத்தல்.
* சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுடைய நலன்களை பாதுகாக்கவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.

* நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13ம் தேதி பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது; இது ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்.
* ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பெற்றிடும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க ஏதுவாக குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைத்திட இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல்.
* ஈழதமிழர்களின் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்துவது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், 3 தீர்மானங்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது.
பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின் மீண்டும் கூட்டணியில் சேர அக்கட்சி முயற்சித்து வரும் நிலையில் ஒன்றிய அரசுக்கு எதிராக அதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு