சொத்து குவிப்பு வழக்கு விசாரணை: அதிமுக மாஜி அமைச்சர் அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜர்

தர்மபுரி: கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் ஏற்கனவே 4 முறை எம்எல்ஏ, 2 முறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது பாலக்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ளார். இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மோளையானூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ‘’கடந்த 2016-2021ம் ஆண்டு வரை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்துள்ளார்’ என்று கூறியிருந்தார்.இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.பி.அன்பழகன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 58 இடங்களில் சோதனை நடத்தி ₹2 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்தனர். வருமானத்திற்கு அதிகமாக ₹45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்து, அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற நடைமுறைகள் தொடங்கியது.

முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா(56), மகன்கள் சசிமோகன்(30), சந்திரமோகன்(33), உறவினர்கள் ரவிசங்கர்(45), சரவணன்(47), சரவணக்குமார்(41), மாணிக்கம்(62), மாணிக்கம் மனைவி மல்லிகா(56), தனபால்(45), சரஸ்வதி பச்சியப்பன் எஜூகேசன் அறக்கட்டளை நிர்வாகி ஆகிய 11 பேர் மீது, தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த மே 22ம் தேதி, 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் மூலம் சம்மன் விநியோகம் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்மந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6ம் தேதி தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது, வழக்கு வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதையடுத்து இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், மாணிக்கம் மனைவி மல்லிகா, தனபால் உள்ளிட்ட 11 பேர் இன்று ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மணிமொழி வருகின்ற 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு