அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கம் எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியின் இடைக்கால பொது செயலாளராக அவரது தோழி வி.கே சசிகலா, துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளரில் இருந்தும் நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சசிகலா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன்மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் அமர்வில் நடைபெற்றது. அப்போது சசிகலா தரப்பில் மூத்த வழக்‍கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, கடந்த 2017ல் நடைபெற்ற பொதுக்குழு சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை. அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யபட்டனர். முதல்வராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சசிகலா தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக தான் உள்ளார். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்று தெரிவித்தார்.

அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், விதிகளின் படி பொதுக்குழு நடைபெற்றது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. கட்சியின் உச்ச பட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு, விதிகளின் படி கூடி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே சசிகலா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சசிகலாவின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், அவரை பதவியிலிருந்து நீக்கிய தீர்மானம் செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?