கட்சி மீது விசுவாசம் இல்லாதவர் அதிமுகவை அழிக்க நினைத்து சகுனி வேலை பார்த்த ஓ.பி.எஸ்: அதிமுக எம்எல்ஏக்கள் கடும் தாக்கு

நாகர்கோவில்: சகுனி வேலை பார்த்து அதிமுகவை அழிக்க நினைத்தவர் ஓ.பன்னீர் செல்வம் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கடுமையாக விமர்சித்து உள்ளனர். நாகர்கோவிலில் அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் என்னை அதிமுகவில் சகுனி வேலை பார்த்தவன் என்று குறிப்பிட்டிருக்கிறார். சகுனி வேலை பார்த்தது யார் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தர்மயுத்தம் நடத்தினார். இரட்டை இலை சின்னத்தை முடக்க காரணமாக இருந்தார். சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்து தோற்கடிக்க வேண்டும் என்ற சதி வேலையை செய்தார்.

டி.டி.வி. தினகரன் முன் கைகட்டி நின்ற ஓ.பன்னீர்செல்வம், பின்னர் அரசியலில் தன்னை வளர்த்த டி.டி.வி. தினகரனையே எதிர்த்து சதி வேலை செய்தவர். ஓ.பன்னீர் செல்வம் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே நான் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவன். பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து உள்ளேன். கட்சியை அழிக்க நினைக்கும் ஓ.பன்னீர் செல்வம், என்னை சகுனி என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கட்சி மீது விசுவாசம் இல்லாதவர்கள். அதிமுக அலுவலகத்தையே அடித்து நொறுக்கியவர். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நிருபர்களிடம் கூறுகையில், ‘ஓபிஎஸ் யாரை (சசிகலா) எதிர்த்து தர்ம யுத்தம் தொடங்கினாரோ, தற்போது அவரையே அதே மெரினா கடற்கரையில் வேண்டுமென்றே சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பினால் ஒரு பயனும் ஏற்படாது. ஓபிஎஸ்சால்தான் அதிமுக பிளவுபடும் சூழ்நிலை உருவானது. எனவே, இந்த சந்திப்பு சிறந்த சந்திப்பு அல்ல. நல்ல சந்திப்பு அல்ல. ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டவர் அல்ல. அவராக ஒதுங்கிக் கொண்டவர்.

அப்படிப்பட்டவரை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இரட்டை இலையை முடக்க நினைத்தவர் இன்றைக்கு பாஜவோடு ஊறி திளைத்துக் கொண்டிருக்கிறார். அதிமுகவையும், இரட்டை இலையையும் நீதிமன்றத்தில் காப்பாற்றியவர் எடப்பாடி. அதிமுகவையும் காப்பாற்றியவர். அவர் எப்படி ஓபிஎஸ் இணைவதற்கு ஒப்புக்கொள்வார்? எடப்பாடி ஏற்றுக் கொண்டாலும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிமுகவை எட்டி உதைத்தவர்கள் ஓபிஎஸ் அணியினர். அவர்களோடு எந்த வகையிலும் இணைவதற்கான சூழல் இல்லை’ என்றார்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்