அதிமுகவை பல இடங்களில் டெபாசிட் இழக்க செய்தோம்: தேர்தல் வெற்றி குறித்து பாஜ தலைவர் அண்ணாமலை கருத்து

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பாஜ கூட்டணியினர் 40 இடங்களிலும் தோல்வி அடைந்தனர். 21 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர். இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் பாஜ வளர்ந்து இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக சேர்ந்து வளர்ந்து இருக்கிறது. எங்களால் இலக்கை அடைய முடியவில்லை என்பது வருத்தமே. கடுமையாகப் போராடியும் தமிழ்நாட்டில் இருந்து பாஜ எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க முடியவில்லை. பாஜவின் வாக்கு சதவீதம் உயர்ந்து இருக்கிறது. தேர்தல் தோல்வியை படிப்பினையாக எடுத்துக் கொண்டு மேலும் உழைப்போம். ஏதாவது ஒரு இடத்தில் தவறு நடந்திருந்தால் அடுத்த ஒரு வாரத்திற்குள் பரிசீலனை செய்வோம்.

அதே நேரத்தில் மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்பை தேசிய ஜனநாயக கூட்டணியும், பாஜவும் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறது. மக்கள் யோசித்துதான் தீர்ப்பு கொடுப்பார்கள். பாஜவுக்கு வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகப்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் ஒரு காரணத்திற்காக 40க்கு 40 என்பதை திமுக கூட்டணிக்கு வழங்கி, பாஜ இன்னும் உழைக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். பாஜவை பொறுத்தவரை 20 சதவீத வாக்குகள் பெற வேண்டும் என்பது இலக்கு. அதேபோல கூட்டணி கட்சியினர் சேரும்போது 25 சதவீதமாக உயரும் என கருதி கடுமையாக வேலை செய்தோம்.

அந்த வகையில் கோவையில் நான் பெற்ற 4.5 லட்சம் வாக்குகளும் பணம் கொடுக்காமல் பெற்றவை. பாஜவின் வெற்றி மூலம் அதிமுகவின் வாக்கு சதவீதத்தை குறைத்து இருக்கிறோம். அதிமுகவை பல இடங்களில் டெபாசிட் காலி செய்ய வைத்திருக்கிறோம். பல இடங்களில் பின்னுக்குத் தள்ளி இருக்கிறோம். திருநெல்வேலி, கன்னியாகுமரியில் பாஜவின் வாக்கு எண்ணிக்கை என்ன? ஆக, நாவடக்கத்தோடு பேச வேண்டும். நாம் தமிழர் கட்சி களத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நாங்களும் பார்த்தோம். சீமான் அவர் பாதையில் பயணிக்கட்டும். நாங்கள் எங்கள் பாதையில் பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

வாழவைக்கும் வாணியம்பாடி தென்னை!

பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி..!!

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் :மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பேட்டி