அதிமுகவினரின் ஊழல் பட்டியலை அண்ணாமலை ஏன் வெளியிடவில்லை; அதிமுகவினர் புனிதர்களா?: சீமான் கடும் விமர்சனம்

மதுரை: அதிமுகவினரின் ஊழல் பட்டியலை அண்ணாமலை ஏன் வெளியிடவில்லை; அதிமுகவினர் புனிதர்களா? என சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குகளும், ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளபோது அவர்களுடைய சொத்துப்பட்டியலை ஏன் வெளியிடவில்லை. அதிமுகவில் இருப்பவர்கள் புனிதமானவர்கள் என்பதை காட்ட திமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுகிறாரா? என கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை நேர்மையானவர் என்றால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டியதுதானே என்றும் சீமான் கூறினார். அண்ணாமலை நடைபயணம் மூலம் தாமரை தமிழ்நாட்டில் மலராது; தண்ணீரில்தான் மலரும் எனவும் சாடினார். சந்திரயான் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசி வருகிறார்.

நிலவில் குடி அமர்த்த நினைத்தால் முதலில் பிரதமர் யாரை குடி அமர்த்துவார்? இந்துக்களையா? முஸ்லிம்களையா? என சீமான் விமர்சித்தார். மீண்டும் பிரதமராக மோடி வந்தால் நாட்டை அழித்துவிடுவார். பிரதமராக மோடியை மீண்டும் தேர்ந்தெடுத்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில்தான் குடியேற வேண்டும்; இந்தியாவில் யாரும் வாழ முடியாது எனவும் சீமான் விமர்சனம் செய்தார்.

கோடநாடு பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்?: சீமான்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து அண்ணாமலை ஏன் பேச மறுக்கிறார்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அஜித் பவார் மீது ஊழல் வழக்கு இருக்கும்போது, அவரை கூட்டணியில் சேர்த்து துணை முதல்வர் பதவி கொடுத்தது ஏன்?.

தமிழகத்தில் உள்ள மொத்த ரவுடிகளும், ஊழல்வாதிகளும் பாஜகவில்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு உள்ளது என சீமான் விமர்சனம் செய்தார்.

Related posts

செட்டிகுளம் முருகன் கோயிலில் புரட்டாசி கிருத்திகை விழா கோலாகலம்: வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் தரிசனம்

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அரசாணை

பில்லி சூனியம், செய்வினை சிறப்பாக செய்வார்; அதிமுக மாஜி எம்எல்ஏ பற்றி பரபரப்பு போஸ்டர்