அதிமுகவின் ஊழலை சுமந்ததால் தான் 2019ல் தோல்வி; அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு பின்னடைவு : அண்ணாமலை பரபரப்பு பேச்சு

சென்னை: அதிமுகவின் ஊழலை சுமந்ததால் தான் 2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தோம். தென் தமிழகத்தில் பாஜகவால் தான் அதிமுக 30 சட்டமன்ற தொகுதிகளை வென்றது. 2024 தேர்தலில் அதிமுக கூட்டணி பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்பதில் மிக மிக தெளிவாக இருந்தேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.கோவையில் தேர்தல் பரப்புரையின் போது தமிழக பாஜக தலைவரும், பாஜக வேட்பாளருமான அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: கோவையை பொறுத்தவரை களம் வித்தியாசமான களம், மும்முனை போட்டியாக ஆரம்பித்து தற்போது அனைவரும் எங்கள் பக்கம் ஒன்று சேர தொடங்கி விட்டனர்.

கோவை தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் பாஜக 60 சதவீத வாக்குகளை பெறும். இன்று கட்சியின் பலத்தை தாண்டி சமுக வலைத்தளம், முதல் தலைமுறை வாக்காளர், பெண்கள் எண்ணங்கள் ஆகியவை முதல் முறையாக இந்த தேர்தலில் மாற்றம் தரும். எந்த அரசியல் கட்சியும் போட்டியாளர்களை விரும்ப மாட்டார்கள், அதனால் தான் சமுக வலைத்தளத்தில் மட்டும் தான் பாஜகவுக்கு ஆதரவு இருக்கிறது என்று கூறுகின்றனர். எங்கே பாஜகவின் கை ஓங்குகிறதோ அங்கே திமுக, அதிமுக எங்களை தோற்கடிக்க கூட்டு முயற்சி செய்கிறார்கள். 2024க்கும் பின் அதிமுக கரைந்து போகும், திமுகவை எதிர்க்க கட்சி தேவையில்லை என மக்கள் நினைக்கின்றனர். திமுக அரசை எதிர்த்து போராடிய கட்சி பாஜக மட்டும் தான், அதிமுக களத்தில் சரியாக எதிர்க்கவில்லை. ஆரோக்கியமான அரசியல் செய்யவில்லை என்னை அட்டாக் செய்வது மட்டுமே அதிமுக தலைவர்களின் பிரதானமாக உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இருந்த கட்சியில் தனிமனித தாக்குதலை முழுநேரமாக வைத்திருந்தால் மக்கள் அதை ரசிக்க மாட்டார்கள்.

என் பேச்சு பெரிய கூட்டணியை உடைத்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் நான் செய்தது ரொம்ப சரியே, கோவையில் 2019ல் அதிமுக- பாஜக இணைந்து 9 லட்சம் வாக்குகளை பெற்றது. 2014ல் அதிமுகவுடன் சேராமல் இருந்தபோதே 2019ஐ விட அதிக வாக்குகளை பெற்றது. இதனால் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும் என நான் தெளிவாக இருந்தேன். 2024 தேர்தலில் அதிமுக கூட்டணி பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்பதில் மிக மிக தெளிவாக இருந்தேன். மக்கள் இந்த கூட்டணியை விரும்பவில்லை. ஊழல் கட்சியுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பை பேசினால் சிரிப்பார்கள். அதனால் தான் பிரதமர் மோடி போன்ற பெரிய மனிதர் இருந்து பெரிய எழுச்சி ஏற்படவில்லை, நான் தலைவராக பொறுப்பேற்றதும் உள்ளாட்சி தேர்தலை தனித்து போட்டியிடலாம் என கூறினேன். பாஜகவின் கதவு, ஜன்னல் திறந்து இருப்பதாக கூறியது அதிமுகவுக்காக இல்லை, அது பாமக, தமாகா ஆக இருக்கலாம்.

தன்னை பெரிய ஆள்(பிக் பிரதர்) என்ற மனநிலையில் அவர்கள் தங்களுக்காக காத்திருப்பதாக நினைத்தனர். தற்போது அதிமுக 6 தலைவர்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறியுள்ளது, அதை தொண்டர்கள் விரும்பவில்லை. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பணத்தை கொள்ளையடிப்பதை ஆட்சி செய்வதா, ரூ.1445 கோடி கோவையில் செலவு செய்யப்பட்டுள்ளது, சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது, தண்ணீர் வசதி இல்லை, நதிகள் காணாமல் போனது, இவ்வளவு பணம் கொட்டி கொடுத்தும் கூட கோவை பின்னோக்கி சென்றுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் 30 தொகுதிகளில் அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.

நாங்கள் வெற்றி பெற்ற 4 தொகுதிகளை விட அதிமுக எங்கள் தொண்டர்களின் உழைப்பால் தான் 30 தொகுதிகளில் வென்றது. அது நாங்கள் கொடுத்த கொடை, அவர்களை போல் பிச்சை என்று தரக்குறைவாக நான் கூற மாட்டேன். 2019ல் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றும் தமிழ்நாட்டில் ஏன் தோல்வியடைந்தோம், 2014ல் நாங்கள் 19 சதவீத வாக்கு பெற்றும் 2019 வரலாறு காணாத தோல்வி, அதிமுகவின் ஊழலை நாங்கள் சுமந்தோம். தென் தமிழகத்தில் மதுரையில் இருந்து குமரி வரை அதிமுக டெபாசிட் கூட வாங்காது, நான் சவால் விடுகிறேன். அதிமுகவில் இரண்டு சமுதாயங்களுக்கு இடையே உள்ள சண்டையால் கட்சியை மொத்தமாக முடித்து விட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் வெற்றி பெறுவார், தேனியில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்ற பின் தென் தமிழக அதிமுக தொண்டர்கள் இவர்களிடம் வருவார்கள். ஜெயக்குமார் ஓபிஎஸ்ஸை எள்ளி நகையாடுகிறார், அவரது மகனை தனி சின்னத்தில் நிற்கவைத்து 1000 வாக்குகளை வாங்க முடியுமா நான் சவால் விடுகிறேன். இப்போது உள்ள அதிமுக தலைவர்களுக்கு வாக்கு கிடைக்கவில்லை, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு தான் வாக்கு கிடைக்கிறது. தேர்தல் அறிவித்த பின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ, எம்பிக்கள் 25 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்களை கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்கள், வயதானவர்கள் என கின்டல் செய்பவர்கள் வரும் காலத்தில் பாஜகவில் இணைய மாட்டார்களா. இவ்வாறு அவர் கூறினார். கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு முதல்முறையாக அண்ணாமலை, அதிமுகவினர் மீதும் அதன் தலைவர்கள் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி