அதிமுக மாநாட்டிற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: மதுரையில் அதிமுக மாநாடு நடத்த தடை கோரிய மனு ஐகோர்ட் மதுரை கிளையில் தள்ளுபடியானது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை அருகே பெருங்குடி கருப்பசாமி கோயில் எதிரே ஆக. 20ல் அதிமுக சார்பில் மாநாடு நடக்கிறது. இந்த இடம் மதுரை சர்வதேச விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. பட்டாசுகள் உயர பறந்து வெடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்படக் கூடும். எனவே, அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரவி ஆஜராகி, ‘‘கடந்த மே 31ல் அனுமதி கேட்டு மனு அளித்தனர். ஜூலை 31ல் அனுமதி வழங்கப்பட்டது. வாணவேடிக்கை கூடாது உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிமுக சார்பில் மூத்த வக்கீல் விஜய்நாராயணன், வக்கீல்கள் தினேஷ்பாபு, மாரீஸ்குமார் உள்ளிட்டோர் ஆஜராகி, ‘‘பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்த்தக் கூடாது என்பது உள்ளிட்ட போலீசாரின் நிபந்தனைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படும். எந்த விதிமீறலும் இருக்காது’’ என்றனர். மனுதாரர் வக்கீல் ஆர்.ஆனந்த் ஆஜராகி, ‘‘விமான போக்குவரத்து அமைச்சக வழிகாட்டுதல்கள்படி இந்த மாநாட்டிற்கு அனுமதி தர முடியாது. விமான நிலைய அதிகாரிகளிடம் ஆலோசிக்காமல் அனுமதிக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘கடைசி கட்டத்தில் விளம்பர நோக்கில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்க முடியாது என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

Related posts

உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!!

யூரோ கோப்பை கால்பந்து: ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு துருக்கி தகுதி

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்