பா.ஜ. தலைவர் அண்ணாமலையை கண்டித்து நாகர்கோவிலில் அதிமுகவினர் கண்டன போஸ்டர்

நாகர்கோவில்: பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்தை தொடர்ந்து அதிமுக, பா.ஜ.வினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டவர்கள் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சென்னையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரும் அண்ணாமலையை கண்டித்துள்ளனர். ஜெயலலிதா குறித்து பேசியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கா விட்டால், கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்றும் அதிமுகவினர் கூறி உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுகவினர் அண்ணாமலை பற்றி பேச தகுதி இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதிமுகவினர், பா.ஜ. இடையே மோதல் போக்கு உச்ச கட்டத்தைஎட்டி உள்ள நிலையில், குமரி மாவட்ட அதிமுகவினர் அண்ணாமலையை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

நாகர்கோவில் நகர் முழுவதும் அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டி உள்ள போஸ்டர்களில், ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறி இருந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் நாகரீகம் தெரியாமல் வரம்பு மீறி பேசிய, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி உள்ளனர். அடுத்த மாதம் 2ம் தேதி, அண்ணாமலை நாகர்கோவில் வர உள்ளார். அந்த சமயத்தில் அண்ணாமலையை கண்டித்து போராட்டம் நடத்த போவதாகவும் அதிமுகவினர் கூறி உள்ளனர். அதிமுக, பா.ஜ. இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்