அதிமுக கூட்டணிக்கு எந்த கட்சிகளை இழுக்கலாம் என ஆலோசனை யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: அதிமுக கூட்டணிக்கு எந்த கட்சிகளை இழுக்கலாம் என ஆலோசனை நடத்திய நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக கடந்த ஆண்டு வெளியேறிய நிலையில், அண்மையில் மதுரையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி பாஜவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணியை அமைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பாஜ கூட்டணியில் அதிமுக இடம் பெறாது என்பது தெளிவாகியுள்ளது. கடந்த இரண்டு பொது தேர்தல்களிலும் பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தற்போது தனித்து தேர்தலை சந்திக்கும் நிலையில் அதிமுகவும் உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் அதிமுகவுக்கு முக்கியம் என கூறப்பட்டாலும், நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும் வாக்கு வாங்கியை பொறுத்து தான் அதன் எதிர்காலம் உள்ளது. வலுவான கூட்டணி இல்லாததால் பெரிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர தயங்குகிறது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை இழுக்க எடப்பாடி முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் பிரதமர் மோடி தேமுதிகவை புகழ்ந்து வருகிறார். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழக பாஜ தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

அதேநேரம் பாமகவுடன் கூட்டணி அமைத்தால் தென் மாவட்டங்களில் வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என அதிமுகவினர் கருதுகின்றனர். இப்படி இடியாப்ப சிக்கலில் தவித்து வரும் நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை மாவட்டச் செயலாளர்கள் கே.பி.கந்தன், ஆதிராஜாராம், விருகை வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்யா, அசோக் உள்ளிட்ட 12 மாவட்டச் செயலாளர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதை வேகப்படுத்துவது, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் நியமனம், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம், கூட்டணிக்கு வர விரும்பும் கட்சிகள், கூட்டணிக்கு அழைக்க விரும்பும் கட்சிகள், அதற்கான வியூகங்களை அமைப்பது, தொண்டர்களின் மனநிலை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பாஜ கூட்டணியில் இருக்கும் போது, ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எடப்பாடி விமான நிலையம் சென்று வரவேற்றும், வழி அனுப்பியும் வைப்பார். ஆனால் கடந்த மாதம் பிரதமர் திருச்சி வந்த போது எடப்பாடி தரப்பில் யாரும் வரவேற்க செல்லவில்லை. இது பாஜ தரப்புக்கு மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்தியதாகள கூறப்படுகிறது.

அதேநேரம், எடப்பாடி தலைமயில் கடந்த ஆட்சியில் நடந்த வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை வழக்குகளை எல்லாம் பாஜ கையில் எடுத்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் சிக்கலில் மாட்டும் சூழல் உள்ளது. எனவே, பிரதமர் மோடியை வரவேற்க செல்லாததால் அவர்களின் கோபம் அதிமுக மீது இருக்கிறது. அதை சமாளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அதிமுக வலுவான கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் சூழ்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் மூத்த நிர்வாகிகள் பலர் போட்டியிட தயங்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தலைமை கூறியபடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை மாவட்ட செயலாளர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் 3 பேரை பரிந்துரை செய்துள்ளதாகவும், அவர்கள் குறித்து எடப்பாடி மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தாகவும் கூறப்படுகிறது.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘ நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி அமைப்போம். கூட்டணி முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணி முடிவானதும் வேட்பாளர்களை இறுதி செய்யலாம். இது நமக்கு மிகவும் முக்கியமான தேர்தல் கவனமாக இருக்க வேண்டும். கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் தொகுதிகளை விட்டுக் கொடுத்து அவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும். மக்களவை தேர்தலுக்கான குழு மற்றும் பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மாற்று கட்சியில் இருந்து சிலர் விலகி நம்மிடம் வரவுள்ளனர். அவர்களையும் அரவணைத்து செல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது’’ என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

* தனித்தனியாக ஆலோசனை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும், நேற்று இரவு மாவட்ட செயலாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம், தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களாக நிற்கக்கூடியவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகள் குறித்த தகவல்களை கேட்டு பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி