அதிமுகவினர் வைத்த விளம்பர பேனர்களை போலீசார் கிழிப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வைரல்: மாங்காடு அருகே பரபரப்பு

குன்றத்துார்: மாங்காடு அடுத்த அய்யப்பன் தாங்கல், விஜயலட்சுமி அவென்யூ பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தது. மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் நடத்திய மாநாட்டிற்காக இவ்வாறு ஆங்காங்கே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு, அய்யப்பன்தாங்கல் பகுதி அதிமுகவினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த அந்த விளம்பர பதாகைகள் 10க்கும் மேற்பட்டவை நேற்று கிழிந்து இருப்பதைக்கண்டு அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் விளம்பர பதாகைகளை கிழித்த மர்ம நபர்கள் யார் என்பதை கண்டறிவதற்காக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அதிமுகவினர் ஆய்வு செய்தனர். அதில், இரவு நேரத்தில் ரோந்து வாகனத்தில் வந்த காவல்துறைக்கு சொந்தமான ரோந்து வாகனம் சாலை ஓரத்தில் இருந்த விளம்பர பதாகைகளை நின்று கண்காணித்து விட்டு சென்ற நிலையில், சிறிது நேரத்தில் அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய உதவி ஆய்வாளர் ஒருவர் வாகனத்தில் இருந்து கத்தியை எடுத்து வந்து, அங்கிருந்த அதிமுக பேனரை கிழித்துவிட்டு, செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், ரோந்து வாகனத்தில் வந்து, விளம்பர பேனரை கிழித்தது மாங்காடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் ஒருவர் தான் என்று அடையாளம் கண்டனர். பின்னர் இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் கேட்டபோது, உரிய அனுமதியின்றி அதிமுகவினர் விளம்பர பேனர் வைத்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து வெகு நாட்களாக ஆனபோதும் விளம்பர பேனர்களை அகற்றாததால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் அகற்றியதாக போலீசார் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக அதிமுகவினர் அங்கிருந்து புலம்பியவாறு சென்றனர். இதனிடையே இரவு நேரத்தில் போலீசார் அதிமுக விளம்பர பதாகைகளை கிழிக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related posts

நில அபகரிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!!

25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்