அதிமுக பொதுக்குழு, எடப்பாடி மீதான முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் கடந்த 29ம் தேதி நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் பட்டியலிட்டிருந்த போது, இந்த வழக்கை நீதிபதி அனிருத்தா போஸ் அமர்வில் முன்னதாக விசாரணையில் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென இந்த புதிய அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி தொடர்பான டெண்டர் முறைகேட்டு வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறையில் எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு வழக்கு நாளை மறுநாள், அதாவது வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மேலும் இந்த வழக்கை நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வு விசாரிக்கிறது.

இதேபோல் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், அதேப்போன்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவும் வரும் வெள்ளிக்கிழமை, அதாவது நாளை மறுநாள் உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு