அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவடைந்தது. நேற்று முன் தினம் 3 இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்திய நிலையில் இன்று 12 இடங்களில் சோதனை நடைபெற்றது. ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ள நிலையில் அவரது வீடு, உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. சுமார் 8 மணி நேரமான நடைபெற்ற இந்த சோதனையில், எம்.ஆர்.வி ட்ரஸ்ட் அலுவலகம், நூல் குடோன் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆவணங்கள் சிலவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி புகார் செய்திருந்தார். இதேபோல் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

சார்பதிவாளர் அளித்த புகாரின்பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், நில உரிமையாளர் பிரகாஷின் மகள் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின்கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உட்பட 6 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பிரகாஷ் வாங்கல் பகுதியில் வசிப்பதால், இவர் கொடுத்த புகார் மட்டும் வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் விஜயபாஸ்கர் தலைமறைவானார். இதற்கிடையே நில மோசடி வழக்கு கடந்த ஜூன் 14-ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் 25 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கேரளா மற்றும் வடமாநிலங்களில் முகாமிட்டு தேடினர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர், கடந்த 12-ம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை 3 முறை ஒத்தி வைக்கப்பட்டு, கடந்த ஜூன் 25ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சையின்போது அவருடன் இருக்க வேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2வது முறையாக முன்ஜாமீன் கோரி கடந்த 1ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவையும் நீதிபதி சண்முகசுந்தர் நேற்று தள்ளுபடி செய்தார்.

இதனிடையே நேற்றுமுன்தினம் எம்.ஆர்.விஜயபாய்கரின் ஆதரவாளர்களான தாளப்பட்டியில் உள்ள யுவராஜ், தோட்டக்குறிச்சியில் செல்வராஜ், கவுண்டம்பாளையத்தில் ஈஸ்வர மூர்த்தி ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல் இன்று கரூர், சென்னையில் 8 இடங்களில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தொடர்புடைய 8 இடங்களில் சிபிசிஐடி போலீசார் காலை 7 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

2 டிஎஸ்பி, 9 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் பல குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் வடிவேல்நகரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு, அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தறிப்பட்டறை, சின்னான்டாங்குறிச்சியில் உள்ள சாயப்பட்டறை, கரூர் திருவிக நகரில் உள்ள விஜயபாஸ்கரின் டிரஸ்டி அலுவலகம், வடிவேல் நகரில் உள்ள விஜயபாஸ்கர் உறவினரான ராஜேந்திரன் வீடு, கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், காமராஜபுரத்தில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் கார்த்திக் வீடு ஆகிய 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சின்னான்டாங் குறிச்சியில் உள்ள விஜயபாஸ்கரின் தம்பி சேகர் வீட்டில் சோதனை நடத்த போலீசார் சென்ற போது, வீடு பூட்டிக்கிடந்தது. இதனால் சோதனை நடத்தாமல் போலீசார் திரும்பி வந்தனர். சென்னையில் அபிராமபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுந்தரம் சாலையில் உள்ள சாய்கிருபா அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை 7.15 மணி முதல் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையிலான 4 போலீசார் சோதனை நடத்தினர்.

வடிவேல் நகரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த அவரது மனைவி விஜயலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் எதுவும் உள்ளதா, விஜயபாஸ்கரும், அவரது தம்பியும் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிய இந்த சோதனை நடந்தப்பட்டதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் காவலை வரும் 29ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல்..!!

தமிழ்நாட்டிற்கு நீர் தர முடியாது என கர்நாடகா கூறியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் : நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!!