நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை: எடப்பாடி ஒப்புதல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதால் யாரும் சோர்ந்து போய் விடாதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 10ம் தேதி முதல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தினமும் 3 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாள்கள், முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்துக்களை கேட்டு வருகிறார். இந்த கூட்டத்தில் பேசிய அனைத்து நிர்வாகிகளும், ‘நாடாளுமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமையாததே தோல்விக்கு காரணம்’ என்று கட்சி தலைமை மீது குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வலுவான கூட்டணியை அமைப்போம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று 4வது நாளாக சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய 3 தொகுதி நிர்வாகிகள், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மேல் மட்ட நிர்வாகிகள் சரியாக உழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதனால் யாரும் சோர்ந்து போய் விடாதீர்கள். நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது. வரும் காலங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள், கீழ்மட்ட தொண்டர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
இன்று ஆலோசனை கூட்டம் இல்லை. நாளை (திங்கள்) 5வது நாளாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார்.

 

Related posts

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனோதத்துவ புத்தாக்கப் பயிற்சி: அமைச்சர் தகவல்

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு, கருங்குரங்கு பறிமுதல்: சென்னை பயணி கைது

தொடர் விடுமுறை 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்