அதிமுக நிர்வாகியின் கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலையால் பரபரப்பு: வீடியோ குறித்து போலீசார் விசாரணை

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் ராஜா. இவர் வடசென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக உள்ளார். இவரிடம் கார் டிரைவராக சென்னை மவுலிவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த பூபதி (35) என்பவர் கடந்த 2 வருடங்களாக பணியாற்றிவந்தார்.

இந்தநிலையில், ராகேஷ் ராஜா தனது ஒரு காரை பெரம்பூர் பி.பி.சாலையில் உள்ள ரபேல் என்பவரின் மெக்கானிக் ஷெட்டில் கடந்த 6 மாதத்துக்கு முன் ரிப்பேர் செய்வதற்காக விட்டிருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் காரை எடுக்க சென்றபோது ரபேல், பூபதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் புகார் கொடுத்த நிலையில், வியாசர்பாடி போலீசார் அவர்களை அழைத்துபேசி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர்.

இதன்பிறகு வீட்டுக்கு வந்த பூபதி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு பூபதியுடன் தங்கியிருந்த சரவணன் என்பவர் டிபன் வாங்கிவிட்டு வந்தபோது பூபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சென்று பூபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இதனிடையே, ‘’தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை’’ என கூறி பூபதி வீடியோ வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ உண்மையானதுதானா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து