அதிமுக மாஜி கவுன்சிலர் கொலை திருட்டு ஆடுகளுக்கு பணம் தராததால் வெட்டி கொலை செய்தோம்: கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

கடலூர்: ஆடுகளை திருடி கொடுத்த எங்களுக்கு பணம் கொடுக்காததால் அதிமுக முன்னாள் கவுன்சிலரை கொலை செய்ததாக கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன். அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் புஷ்பநாதன் கடந்த சனிக்கிழமை இரவு தனது மோட்டார் சைக்கிளில் புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் புஷ்பநாதனை கத்தியால் முகத்தில் பலமுறை வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். தனிப்படையினர் நடத்திய விசாரணையில் அஜய்(21), நேதாஜி(23) மற்றும் சந்தோஷ்(24) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து புஷ்பநாதனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம்: நாங்களும் முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதனும் ஒரே ஊர்.

அவர் ஆடு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதனால், ஆடுகள் திருடி வந்து கொடுத்தால் பணம் தருவதாக எங்களிடம் கூறினார். இதை நம்பி நாங்களும் பலமுறை அவருக்கு ஆடுகள் திருடி வந்து கொடுத்தோம். ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்காமல் மிக மிக குறைவான பணத்தையே கொடுத்தார். சில சமயங்களில் பணமும் கொடுக்காமல் இருந்தார். மேலும் ஆடுகள் திருடும்போது நாங்கள் போலீசில் சிக்கிக் கொண்டோம். ஆனால் எங்களை அவர் ஜாமீனில் எடுக்கவில்லை. மேலும் ஆடுகள் திருட எடுத்துச் சென்ற காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதையும் அவர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் செலவுக்கு பணம் கேட்டபோது அதையும் கொடுக்காமல் இருந்து வந்தார். மேலும் ஊர்க்காரர்களிடம் எங்களை ஆடு திருடர்கள் என்று கூறி வந்தார். இதனால் நாங்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தோம். மேலும் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, நாங்கள் திட்டமிட்டபடி சனிக்கிழமை இரவு அவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது அவரை வழிமறித்து கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து கைதான மூன்று பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், புஷ்பநாதனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Related posts

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு