அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

கடலூர்: கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடலூர் வண்டிபாளையம் பகுதியில் அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். கொலை தொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டததை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன் (45). கடலூர் நகராட்சியின் முன்னாள் அதிமுக கவுன்சிலரான புஷ்பநாதன், தற்போது அதிமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு புஷ்பநாதன் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது வண்டிபாளையம் சூரசம்கார தெருவில் மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்தது. இதனால் பதறிய அவர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓடியுள்ளார். இருப்பினும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் அவரை துரத்தி சென்று நடுரோட்டில் வைத்து வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து உயிரிழந்த புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க கோரி இறந்த புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வண்டிப்பாளையம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பிரமுகர் கொலை காரணமாக கடலூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் முன்விரோதம் காரணமாக புஷ்ப நாதன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் உட்கட்சி பிரச்சனை காரணமா? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு