இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணிக்காக பா.ஜ.க. தவம் கிடக்கிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

சென்னை: இந்த நிமிடம் வரை கூட்டணியில் சேர்க்க அதிமுகவுக்காக தவம் கிடக்கிறது பாஜக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக கட்சிகள் கடந்த சில காலமாகவே கூட்டணியில் இணைந்து பயணித்து வந்தது. கடந்த லோக்சபா தேர்தலில் இந்தக் கூட்டணி உருவான நிலையில், இரு கட்சிகளும் இணைந்தே பயணித்து வந்தனர். இடையே சில மோதல்கள் வந்தாலும் இரு கட்சிகளும் இணைந்தே பயணித்து வந்தன. இந்தச் சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக குறித்தும், அதன் முன்னாள் தலைவர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வந்தார்.

இதில் கடுப்பான எடப்பாடி தரப்பு பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டது. அந்த நேரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இனி பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது” என்றார். இது பாஜக-வினரை கொதிப்படைய செய்தது. பிறகு எவ்வளவு முயற்சித்தும் அதிமுகவை கூட்டணிக்கு இழுக்க முடியாமல் தவிக்கிறது பாஜக என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சமீபத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது” என்று மறைமுகமாக அதிமுகவுக்கு விடும் தூது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த நிமிடம் வரை கூட்டணியில் சேர்க்க அதிமுகவுக்காக தவம் கிடக்கிறது பாஜக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;
பாஜக வலுவாக இருந்தால் அதிமுகவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதாக வரும் கணிப்புகள் எதுவும் உண்மை இல்லை. கூட்டணியில் அதிமுகவை சேர்க்க பாஜகவினர் ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள். அதிமுக பலமாக இருப்பதால் பாஜக எங்களுக்காக காத்திருக்கிறது; இல்லையெனில் ஏன் காத்திருக்க வேண்டும் என்று கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

 

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!