65 ஏக்கரில் ஒரு பசுமைக்காடு! வெளிநாட்டு மரங்களும் விதம் விதமாய் இருக்கு

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற இயக்கமே இருந்தது. அரசாங்கமே வீட்டுக்கு வீடு ஒரு மரக்கன்றைக் கொடுத்து நடச் சொல்வார்கள். அப்படியும் சில இடங்களில் மரங்களே இருக்காது. ஆனால் இப்போது இந்த நிலை இல்லை. பலர் தங்களது சொந்த ஆர்வத்தாலேயே மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வயல்களை வெறுமனே போட்டு வைத்திருந்த காலமும் மலையேறிக் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு மரத்தைப் போட்டால் சில ஆண்டுகள் கழித்து நல்ல வருவாய் பார்க்கலாம் என எண்ணி மரங்களை இப்போது அதிக எண்ணிக்கையில் பயிர் செய்து வருகிறார்கள். சிலர் மரம் வளர்ப்பை ஒரு முறையான சாகுபடியாக செய்து வருகிறார்கள். சிலர் பொழுதுபோக்காக செய்து வருகிறார்கள். எது எப்படியோ மரம் வளர்ப்பு நிச்சயம் எல்லோருக்கும் பலன் தரக்கூடியதுதான்.

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் மஜித் காலனியை சேர்ந்த சலாஹதீன், வெளிநாட்டில் தொழிலதிபராக இருந்தபோதும் தனது சொந்த ஊரில் பல்வேறு மரங்களை வளர்ப்பதில் அலாதி ஆர்வம் கொண்டிருக்கிறார். மயிலாடுதுறை பகுதியில் உள்ள நீடூர் மற்றும் பாண்டூர் கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக நிலங்களை வாங்கிய சலாஹதீன், அதில் நம்மூர் மரங்களோடு, பல்வேறு வெளிநாட்டு மரங்களையும் வளர்த்து வருகிறார். அவரது வயலுக்குச் சென்றால் ஏதோ ஒரு வனப்பிரதேசத்திற்குள் சென்றது போல் இருக்கிறது. இத்தகைய எழில் சார்ந்த சூழலில் சலாஹதீனைச் சந்தித்தோம்.

வெளிநாட்டில் தொழிலதிபராக இருந்து வரும் எனக்கு சிறிய வயது முதலே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். இதனால் பிசினஸில் கிடைக்கும் லாபத்தை வைத்து நீடூர் மற்றும் பாண்டூர் கிராமங்களில் 65 ஏக்கர் நிலத்தினை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கினேன். இந்த முழு நிலத்தினையும் காடாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் 10 ஏக்கர் நிலத்தில் மரங்களை நடவு செய்ய முடிவு செய்தேன். மயிலாடுதுறை, ஊட்டி, நாகர்கோவில், புதுக்கோட்டை, சேலம், காரைக்குடி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேக்கு, வாழை, சவுக்கு உள்ளிட்ட செடிகளை வாங்கி வந்து நடவு செய்து வளர்த்தேன். நிலத்தின் தன்மை நன்றாக இருந்ததால் அனைத்து மரங்களும் நல்ல முறையில் வளர்ந்தது. இதனைத்தொடர்ந்து பண்ணைக்குட்டை ஸ்டைலில் ஆங்காங்கே கால்வாய் போன்று மேடு, பள்ளம் அமைத்து தண்ணீர் நிற்கும் வகையில் வடிவமைத்தேன். மேடான பகுதிகளில் மரவகைகளை நட்டேன். பள்ளத்தில் தண்ணீரைத் தேக்கி வைத்தேன். இந்த வாய்க்காலில் கட்லா, அயிலா, கெண்டை, ரோகு, புழுக்கெண்டை, விரால் என மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டேன். மீன் குஞ்சுகளை மன்னார்குடி, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி வந்தேன். இந்தத் தண்ணீரைத் தோட்டத்திற்கு பாய்ச்சும்போது மீனின் கழிவுகள் மரங்களுக்கு சிறந்த உரமாக மாறியது. இதன்மூலம் நான் நடவு செய்த அனைத்து மரங்களும் நன்கு வளரத் தொடங்கியது. இது எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.

அப்போதுதான் பழ மரங்களையும் நடவு செய்யத் தொடங்கினேன். இதில் மா, பலா, வாழை, தென்னை, பனை, சீதாமரம், பப்ளிமாஸ், முந்திரி, பாதாம், பாக்கு, ஆரஞ்சு, அத்தி, ரெட்ரோஸ், யானை பிடுக்கு, கொடுக்காப்புளி, மகோகனி உள்ளிட்ட மரங்களை நடவு செய்து வளர்த்து வருகிறேன். இந்த மரங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள மங்குஸ்தான், ஜம்புருட்டான், ரம்புருட்டான், டயாமவுன்ட், பெரிஸ் உள்ளிட்டவற்றையும் வளர்க்கிறேன். மேலும் அழிந்துவரும் தான்றி, மகிழம், கோங்கு, விளா, சரக்கொன்றை, கடுக்காய், மகாவில்வம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளையும் தற்போது நடவு செய்திருக்கிறேன். இந்த மரங்கள் அனைத்தும் நல்ல முறையில் செழித்து வளர்ந்து வருகின்றன. காட்டில் நான், வேலையாட்கள் உட்பட 8 பேர் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுகிறோம். தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும்போது மற்ற 7 பேர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள்.இதுபோக மூலிகைச் செடிகளான சிறியா நங்கை, கருநொச்சி, மலைவேம்பு, யானை நெருஞ்சி, பிரண்டை, மிளகு, திப்பிலி, வாசனை பட்டை வகை உள்ளிட்ட செடிகளையும் நெல்லை, கடலூர் போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி வந்து வளர்க்கிறேன். தமிழ்நாட்டில் தற்போது பல கிழங்கு வகைகள் அழிந்து வருகின்றன. இதனால் அரிய வகை கிழங்குகளான ஆட்டுக்கால் கிழங்கு, சிறு கிழங்கு, செரிக் கிழங்கு, காவலி கிழங்கு, முடக்கு கிழங்கு, செவ்வாரி கட்டக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு கிழங்கு வகைகளையும் என்னுடைய பயிரிட்டு இருக்கிறேன்.

65 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கரில் முழுவதுமாக மகோகனி மரம் வைத்திருக்கிறேன். இந்த மரத்தை நடவு செய்வதற்கு முன்பு நிலத்தை 3 முறை நன்கு உழுதோம். பிறகு காடுகளில் உதிர்ந்த இலைகளையே அரைத்து நிலத்தின் வளத்தை அதிகப்படுத்திய பின்பு மரங்களை நடவு செய்தேன். 2க்கு 1 அடி என்ற கணக்கில் குழி தோண்டி செடிகளை நடவு செய்தோம். ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் 6 அடி இடைவெளி விட்டு நடவு செய்துள்ளோம். அப்போதுதான் வேர்கள் அதிகமாக பிரிந்து மரங்கள் உயரமாக வளரும். நாங்கள் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 950 மரங்களை நடவு செய்துள்ளோம். தற்போது இந்த மரங்கள் மூன்று மாதத்தில் 3 அடி உயரம் வரை வளர்ந்திருக்கிறது. இது முழுவதுமாக வளர்ந்து வருவதற்கு 3 ஆண்டு காலம் வரை ஆகும். அதற்கு பின்புதான் மார்க்கெட் விலையைப் பொருத்து மரத்தை விற்பனை செய்வோம்.

அதேபோல் 5 ஏக்கரில் சவுக்கு மரங்களை நடவு செய்திருக்கிறோம். இதற்கு பெரிதாக பராமரிப்பு இருக்காது. வளர்ந்து வரும் மரங்களை தண்ணீரில் அழுகாமல் பார்த்துக் கொண்டாலே போதுமானது. சவுக்கு மரங்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து மரங்களுக்கும் இது பொருந்தும். சவுக்கு, மகோகனி மரங்களைத் தவிர மா, பலா, வாழை போன்ற மரங்கள், கிழங்குகள், தேக்கு, செம்மரம், வில்வம் உள்ளிட்ட பல மரங்களை ஊடுபயிராகவே வைத்து வளர்த்து வருகிறேன். இதுபோக வீட்டிற்குத் தேவையான கத்தரி, வெண்டை, அவரை, பீன்ஸ், முருங்கை, கொத்தவரங்காய் உள்ளிட்டவற்றையும் எங்களுடைய காடுகளிலேயே வைத்து வளர்த்து வருகிறோம். இங்கு 400க்கும் அதிகமான தேக்கு மரங்கள் இருக்கின்றன. இதற்கு நடுவில் ஊடுபயிராக வாழைமரம் வைத்திருக்கிறேன். இதில் கிடைக்கும் வாழைத்தார்களை விற்பனை செய்கிறேன். கடந்தாண்டு சவுக்கு மரத்தை அறுவடை செய்து விற்பனை செய்ததில் ரூ.4 லட்சம் வருமானமாக கிடைத்தது. குட்டைகளில் வளரும் மீன்களை லீசுக்கு விடுகிறேன். இதன்மூலம் கடந்த ஆண்டு எனக்கு ரூ.5 லட்சம் வருமானமாக கிடைத்தது. இதுதான் இந்தப் பண்ணையின் மூலம் எங்களுக்கு கிடைத்த முதல் வருமானம். தற்போது வரை 1 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறோம்.

இந்தப் பகுதியில் 65 ஏக்கரில் காடுகளை உருவாக்கிய பின்பு வெயில் காலங்களில் அதிக சூடு இல்லாமல் இருப்பது போல உணர முடிகிறது. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும்போது, தோட்டப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவதோடு, பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று காடுகள் பற்றியும் மரங்களின் தேவை பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். காட்டில் காலைப்பொழுதில் பல்வேறு வகையான பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. பறவைகளின் எச்சம் மரங்களுக்கு இயற்கை உரங்களாக மாறுகிறது. அதிக முதலீட்டைப் போட்டுத்தான் இந்தக் காட்டை உருவாக்கி இருக்கிறேன். இதில் சுமார் 15 ஆண்டுகள் கழித்துத்தான் பெரிய அளவில் வருமானம் கிடைக்கும். ஆனால் இப்போது அதைவிட மனதுக்கு நிறைவாக இருக்கிறது. இதனால் செலவைப் பற்றி கவலைப்படாமல் மரங்களைப் பெருக்கிக் கொண்டே இருக்கிறோம்’’ நெகிழ்ச்சி
யுடன் பேசுகிறார் சலாஹதீன்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை