விவசாயம் செய்வதாக நுழைந்து மனைகளாக மாற்றும் அவலம் தொடர் கதையாகும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

*ஏரியில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்படுமா?

*பாதுகாப்பு நடவடிக்கை அவசியம் தேவை

பாகூர் : புதுச்சேரியில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சேரி குறுகிய மாநிலமாக இருந்தாலும், தென்பெண்ணை, சங்கராபரணி, மலட்டாறு உள்ளிட்ட ஆறுகள் புதுவை நிலப்பரப்பை ஒட்டியும், கடந்தும் செல்கின்றன. தமிழக பகுதியில் பெய்யும் மழை நீரை இந்த ஆறுகள் வழியாக புதுவைக்கு எடுத்து வருவது நமக்கு கிடைத்த இயற்கையின் வரம் எனலாம்.

அப்படி எடுத்து வரும் நீரை வாய்க்கால்கள் வழியாக புதுச்சேரியில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு சென்று சேமிக்கப்பட்டு வந்தது. இதனால் புதுவையில் இயற்கை ஊற்றுகளும், மூன்று போகமும் விலையும் வளமான விவசாய நிலங்களும் இருந்தது. இதன் காரணமாக குடிநீரும், விவசாயமும் செழித்திருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது.

நில வியாபாரத்தால் கண்மூடித்தனமாக வளமான விவசாய நிலங்கள் வணிகமாக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர்நிலைகள் பயன்பாடுகள் குறைந்துவிட்டதால் ஏரி குளங்கள் போன்ற நீர்நிலைகள் பாதிக்கப்படும்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக நீர்நிலைகள் விவசாய நிலங்களாகவும், வணிக மனைகளாகவும், கட்டிடங்களாகவும் மாறி வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இங்கு 100க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்துள்ளதாக தெரிகிறது.

பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 84 ஏரிகள் மட்டுமே எஞ்சி உள்ளது. இந்நிலையில் புதுவையின் 2வது பெரிய ஏரியான பாகூர் எரியிலிருந்து 4,300 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. நிலத்தடி நீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியில் ஒரு குறிப்பிட்ட பகுதி தமிழகத்துக்கு உட்பட்டிருந்தாலும் பராமரிப்பு முழுவதும் புதுச்சேரி அரசின் பொறுப்பில் உள்ளது. தமிழக பகுதியான உள்ளேரிப்பட்டு, கரைமேடு, விநாயகபுரம் கரையொட்டிய ஏரியில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஏரியில் 193.30 மில்லியன் கனஅடி நீரை முழுமையாக தேக்கி வைக்க முடியவில்லை.

இதனை இப்படியே விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் ஏரி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீர் சேமிக்க முடியாமல் போய்விடும் என்று ஏரி சங்கங்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் எச்சரிக்கின்றனர். இதுபோல்தான் கிருமாம்பாக்கம் பெரிய ஏரியின் ஓரத்தில் விவசாயம் செய்தனர். பின்னர் சிறிது சிறிதாக ஏரியை முழுவதும் விவசாயத்திற்காக ஆக்கிரமித்தனர். ஒரு கட்டத்தில் பெரிய ஏரி வாய்க்கால் போன்று மாறி காட்சிப்பொருளாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அந்த ஏரிக்குள் நில வணிகத்திற்காக மனைகளாக பிரிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அரசு கண்டு கொள்ளவே இல்லை. இதையடுத்து ஏரிக்குள் தற்பொழுது கட்டிடங்கள் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. இதனை இப்படியே விட்டுவிட்டால் ஏரி முழுவதும் கட்டிடங்களாகவே மாறிவிடும் என்கின்றனர். நீர்நிலை பாதுகாப்பு குறித்தும் தண்ணீர் சேமிப்பு குறித்தும் விழா எடுக்கும் புதுவை அரசு நிர்நிலைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவது குறித்து கண்டு கொள்ளாதது ஏன்? என்று புரியவில்லை.

பாகூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு பாகூர் பகுதியில் இருந்துதான் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது இப்படியிருக்க பாகூர் பகுதியிலிருந்து நகரப் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டம் அதிகார வட்டத்தின் மனக்கணக்கில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதற்காகவே பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், பெருமழை ஏற்படும்போது, அந்த நீரை சேமிக்க முடியாத நிலையில், ஊருக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நீர் நிலைகள் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. எஞ்சியிருக்கும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்து வருகிறோம்.

இதுகுறித்து பங்காரு வாய்க்கால் நீர் ஆதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறும்போது, நீர்நிலைகளை முதலில் விவசாயம் செய்துதான் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். பின்னர் படிப்படியாக கட்டிடங்களாக மாறி விடுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் தெளிவாக இருந்தாலும் எப்படி அரசு அதிகாரிகள் நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை அளவீடு செய்து நீர்நிலைகளுக்குள் கட்டிடம் கட்டப்பட்டிருந்தாலும், கட்டி வந்தாலும் அதனை உடனே தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் நீர்நிலைகளுக்குள் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பாகூர் ஏரியில் உள்ள பட்டாக்களை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.

Related posts

முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்; ஆனால், அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்கள் : உயர்நீதிமன்றம் கருத்து

பழனி பஞ்சாமிர்தம் பற்றி வதந்தி: பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது வழக்கு

குஜராத்தில் குழந்தையை கொன்ற பள்ளி முதல்வர் கைது..!!