வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள்

*கலெக்டர் ஆய்வு

குன்னம் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வெண்மணி, நல்லறிக்கை, காடூர் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று பார்வையிட்டார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் நல்லறிக்கை கிராமத்தில் பாண்டியன் என்ற விவசாயி நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையை பார்வையிட்ட கலெக்டர் மாவட்டத்தில் அதிக பகுதிகளில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இதுபோன்ற பண்ணைக் குட்டைகளை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

காடூர் கிராமத்தில், வேளாண் பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்படும் தடுப்பணை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். தடுப்பணையில் நீர் தேக்கப்படுவதால் அருகாமையில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரக்கூடும். இதனால் குறித்த காலத்தில் பணிகளை முடிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் பயிர் சாகுபடியை துவங்கிட ஏதுவாக இருக்கும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வேப்பூர் ஒன்றியம் காடூர் கிராமத்தில் உள்ள வண்ணாங்குட்டையை ரூ.75ஆயிரம் மதிப்பில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளதை பார்வையிட்ட கலெக்டர், நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட அனைத்து தூர்வாரும் பணிகளையும் மழைக்காலம் தொடங்கும் முன்பே முடித்துவிட வேண்டும் என்றும், பண்ணைக்குட்டை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தினார்.

வேப்பூர் ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வரப்பு பயிர் சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு உளுந்து விதைகளும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மண்வள இயக்கதின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் மற்றும் 50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களையும் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் கற்பகம் தெரிவித்ததாவது: கலைஞரின் ‘‘அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” என்ற மாபெரும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் 2021-2022-ம் நிதியாண்டில் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கிராமங்களில் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவை அடைந்திட வேளாண்மைத் துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும், வேளாண்மையில் மகசூல் பெருக்கம் அடைந்திடவும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயல்படுத்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக, தரிசு நிலத் தொகுப்பினை குழுவாக ஏற்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வருவதற்கும் மற்றும் தனி நபர் ஒருவர் தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றுவதற்கும் மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.9,600 வீதம் ரூ.15.74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல கிராமங்களில் இத்திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகினற்து. தரிசு நிலத்தினை சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் மூலம் வரப்பு ஓரங்களில் பயறுவகை பயிரினை சாகுபடி செய்திட ஒரு எக்டேருக்கு ரூ.1,500 வீதம் ரூ.8.61 லட்சம், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல் விளக்க திடல் அமைத்திட ஒரு எக்டேருக்கு ரூ.300 வீதம் ரூ.3 லட்சம், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடப்பாண்டில் ரூ.50.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தனிநபர் பட்டா நிலங்களில் 8 பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு 11.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நீர்வடிப்பகுதி முகமையினால் உருவாக்கப்பட்ட நீர்நிலைச் சொத்துக்களை பாதுகாத்திட பராமரிக்கும் பணிகளான குளம், குட்டை தூர்வாருதல் ,வரத்துவாரி சீரமைத்தல், தடுப்பணை நீர் தேங்கும் பரப்பினை தூர்வாருதல் போன்ற 59 பணிகளுக்கு தலா 33,000 ரூபாய் என 16.5 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வேளாண்மைப் பொறியியல் துறையினரால் தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, தோட்டக்கலைத்துறை என வேளாண் சார்ந்த பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வுகளில், வேளாண்மை இணை இயக்குநர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அசோக்குமார், உதவி செயற்பொறியாளர் சிவபிரகாசம், வட்டாட்சியர் கோவிந்தம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பூங்கொடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அரசு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும்

வேப்பூர் ஒன்றியம் காடூர் பகுதியில் நீர்நிலைக்கு அருகே இருக்கும் அரசு நிலங்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நெல் பயிரிடப்பட்டுள்ளதை, பார்த்த கலெக்டர் அப்பகுதிக்கான அ-பதிவேட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசுக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்க தனியாக யாரும் வருவார்காளா? அரசு அலுவலர்கள்தான் மீட்டெடுத்து காப்பாற்ற வேண்டும். அரசுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுங்கள் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றேன்.

இளம் வயதில் பணியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களாகிய உங்களுக்கும் அந்த எண்ணம் வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு உங்களுக்கும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அரசு நிலம் எவ்வளவு இருக்குனு அளந்து கற்களை ஊன்ற வேண்டும் என்றும், இங்கு விளைச்சல் எடுத்ததும் இந்த இடத்தை உடனே மீட்டெடுக்க வேண்டும் என்றும், பயிரிட்டவர்களை அழைத்து இனிமேல் இங்கு பயிரிடக்கூடாதென்று அறிவுறுத்துங்கள் என்றும் வருவாய்த்துறையினருக்கு தெரிவித்தார்.

25 கிராம ஊராட்சிகளில் தரிசு நிலத்தில் சாகுபடி திட்டம்

தமிழக முதல்வரின் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, தொகுப்பு தரிசு நிலங்களில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றப்படுகிறது.தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 25 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் வட்டாரத்தில் புதுநடுவலூர், நொச்சியம், அய்யலூர் மற்றும் அம்மாபாளையம் கிராம பஞ்சாயத்துக்களிலும், ஆலத்தூர் வட்டாரத்தில் மேலமாத்தூர், கூடலூர், தேனூர், அருணகிரிமங்கலம், ஜமீன்ஆத்தூர், ராமலிங்கபுரம், செட்டிகுளம் மற்றும் கொளக்காநத்தம் கிராம பஞ்சாயத்துக்களிலும், வேப்பூர் வட்டாரத்தில் வசிஷ்டபுரம், பேரளி, காடூர், கீழபெரம்பலூர், பெண்ணகோனம், ஒகளுர் மற்றும் சித்தளி கிராம பஞ்சாயத்துக்களிலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் நூத்தப்பூர், மேட்டுப்பாளையம், வெங்கலம், அனுக்கூர், நெய்க்குப்பை மற்றும் பில்லாங்குளம் கிராம பஞ்சாயத்துக்களிலும் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Related posts

பெரியார் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் மரியாதை..!!

கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லையில் அரசுத்துறை அலுவலர்கள் சமூகநீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி

கேரள நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கு ஜாமீன்