கார்பரேட்டுக்கு இணையாக ‘அக்ரி ஸ்டார்ட்-அப்களும்’ கோடிகளில் லாபம் ஈட்டலாம்: நிபுணர் அஸ்வின்

மண் காப்போம் ஸ்டார்ட்-அப் திருவிழாவில் வெற்றிக்கான உத்திகள்; சொல்கிறார் பிராண்டிங் நிபுணர் அஸ்வின்!

ஆள் பாதி ஆடை பாதி என்கிற வாசகத்தை வழக்கமாக அனைவரும் பயன்படுத்துவோம். ஆனால் வணிகத் துறையில் “ப்ராடக்ட் பாதி பேக்கிங்(packing) மீதி” என்கிற புதிய பார்வையுடன் களம் இறங்கி உள்ளார் “ஷேப்பர்ஸ் ஸ்டூடியோ” நிறுவனத்தின் நிறுவனர் அஸ்வின். பெருநிறுவனங்களுடன் கை கோர்த்து அவர்களின் தயாரிப்புகளுக்கு பேக்கிங், பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் பகுதிகளில் அலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் இவர் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் புதிதாக தொழில் தொடங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பேக்கிங் வடிவமைப்புகள், மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் தொடர்பான வழிகாட்டுதல்களை இவர் நிறுவனத்தின் மூலம் பயிற்சியாக வழங்கி வருகிறார்.

இவரின் வழிகாட்டுதலின் கீழ் இன்று பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. குறிப்பாக விவசாயம் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களுக்கு இவர் தன் அனுபவத்தின் மூலமும், புதுமையான சிந்தனைகளின் மூலமும் தீர்வு சொல்கிறார். வேளாண் சார்ந்த பொருட்களை வணிக ரீதியாக சந்தைப்படுத்தும் போது அதற்கு பேக்கிங் மற்றும் பிராண்டிங் என்கிற அம்சங்கள் எத்தனை முக்கியம் என்கிற கேள்வியை அவரிடம் வைத்த போது விரிவான தகவல்களுடன் பேசத் தொடங்கினார் “முன்பெல்லாம் கடைக்கு சென்று ஒரு பொருள் கேட்டால், கடைக்காரர் கொடுக்கும் பொருளை வாங்கி வந்த காலம் ஒன்று இருந்தது.

ஆனால் இன்று வாடிக்கையாளர்கள் மிகத் தெளிவாக சிந்திக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள். அப்படியொரு சூழலில் அவர்களின் கவனத்திற்கு நம் பொருளை நாம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டியது நம் கடமை. இதை பேக்கிங் மூலம் தான் செய்ய முடியும். காரணம் பேக்கேஜிங் மூலமாக நம் பொருளின் தன்மையை, தரத்தை நாம் ஓரளவு வெளிப்படுத்தி விட முடியும். இன்றைய நவீன காலத்தில் நம்மை சுற்றியிருக்கும் குறுகிய வட்டத்திற்கு மட்டும் நம் பொருட்களை பற்றி தெரிந்திருந்தால் போதாது. நம் கண்களுக்கு தெரியாத இடங்களிலும் நம் தயாரிப்புகள் பளிச்சென தெரிய வேண்டும். அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் நம் பொருள் பரவலாக அறியப்பட வேண்டும். இதில் பேக்கிங் தான் நமக்கான மார்க்கெட்டிங் உத்தியாக செயல்படுகிறது.

இன்றைய விவசாயிகள் மிகத் தரமான பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் உரிய கரங்களில் கொண்டு சேர்ப்பதில் தான் அவர்களுக்கான சவாலே தொடங்குகிறது. இதை புரிந்து கொண்டு பேக்கிங் என்கிற ஒற்றை அம்சத்துடன் நிற்காமல் பல விதமான பயிற்சிகளை கொடுக்கிறோம். உதாரணமாக, சந்தைப்படுத்துவதில் இருக்கும் வாய்ப்புகள் என்ன? இதற்கு எத்தனை மூலதனம் தேவைப்படும், அவர்களின் பலம் என்ன பலவீனம் என்ன? அவர்களின் போட்டியாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள் மற்றும் தொழிலில் உள்ள சவால்களுக்கு பேக்கிங் மற்றும் பிராண்டிங் மூலம் எப்படி தீர்வு காண்பது உள்ளிட்ட அனைத்து விதமான பயிற்சிகளையும் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்-அப்களுக்கு வழங்கி வருகிறோம்.

இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட எப்.பி.ஓ-க்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். அதில் நாங்கள் பயிற்றுவித்த “உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்” கடந்த ஆண்டு சிறந்த எப்.பி.ஓ என்கிற விருதினை பெற்றது. தற்சமயம் 14 எப்.பி.ஓ-க்களுடன் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறோம். 2012 ஆம் ஆண்டில் நானும் என் நண்பரும் மட்டுமே இணைந்து ஓர் அலுவலகத்தை ஆரம்பித்தோம். இன்று எங்கள் குழுவில் 12-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். 75 நிறுவனங்களுக்கு மேல் பேக்கிங் சார்ந்த ஆலோசனைகள் வழங்கியிருக்கிறோம். 300 பிரிவுகளுக்கு தேவையான பல நூறு பேக்கேஜிங் வடிவமைப்புகளை செய்துள்ளோம். எங்கள் அனுபவத்தின் மூலம், நாங்கள் கற்ற பாடத்தின் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்-அப் களை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வதே எங்கள் நோக்கம்” என பேரார்வத்துடன் பேசினார்.

மேலும் இத்துறை சார்ந்த இன்னும் பல விரிவான தகவல்களை, வழிகாட்டுதல்களை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோவையில் மண் காப்போம் இயக்கம் நடத்தும் “அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழாவில்” பகிர்ந்து கொள்ள இருக்கிறார். இவரை போலவே மேலும் பல வேளாண் தொழில்முனைவோர்களும், வல்லுநர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விவசாய பொருட்களை மதிப்பு கூட்டுதல், பிராண்டிங் செய்தல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து பேச இருக்கிறார்கள். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Related posts

திருப்பதி லட்டு தரம் குறித்து முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூறியது உண்மைதான்: திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஒப்புதல்

எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு!

முதல் டெஸ்ட் போட்டி; 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வங்கதேச அணி!