திமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம்; மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

* முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், வைகோ ஒப்பந்தத்தில் கையெழுத்து

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதிகள் என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுக்கிறது.

தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினருடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதில் விசிகவுடன் உடன்பாடு ஏற்பட்டது. இதில் விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவிற்கும், விசிகவுக்கும் இடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி உடன்படிக்கையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டனர். அப்போது திமுக பொது செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஆ.ராசா எம்பி, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரவிக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, பாபு மற்றும் விசிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அந்த ஒப்பந்தத்தில், ‘‘நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், திமுகவும்-விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மற்ற தோழமை கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தொகுதி உடன்பாடுகள் குறித்து திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கலந்து பேசியதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. பிற கூட்டணி கட்சிகளின் இறுதி தொகுதி பங்கீட்டுக்கு உட்பட்டு இப்பட்டியல் இறுதி செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் தொகுதி பங்கீட்டிற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர். அப்போது திமுக நிர்வாகிகள், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, அவைத்தலைவர் அர்ஜூன மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். ஒப்பந்தத்தில், ‘‘தொகுதி உடன்பாடுகள் குறித்து திமுகவும், மதிமுகவும் கலந்து பேசியதில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்திற்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்குகிற திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து பணியாற்றுவது, திராவிட இயக்கத்தை மென்மேலும் வலுப்படுத்துவதற்கு எங்களுடைய அனைத்து சக்திகளையும் பயன்படுத்துவோம். நிரந்தரமாக திமுகவுக்கு பக்கப்பலமாக இருப்போம். ஒரு தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி என்ன என்பது பற்றி மற்ற கட்சிகளுடன் பேசி முடித்து விட்டு கூறுவதாக உறுதியளித்துள்ளார்கள்.

நாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். மாநிலங்களவை சீட் குறித்து பேசவில்லை. இன்னும் 15 மாதங்கள் இருக்கிறது. கடந்த முறை ஒரு மாதத்தில் மாநிலங்களவை தேர்தல் வந்தது. அதனால், மாநிலங்களவை தேர்தல் ஒப்பந்தமும் அப்போது கையெழுத்தானது. ஆனால், இப்போது மாநிலங்களவை தேர்தலுக்கு 15 மாதம் இருக்கிறது. அப்போது அந்த கட்டத்தில் பேசுவோம். நாங்கள் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம். 4 விருப்ப தொகுதி என்று கொடுக்கவில்லை.

நாங்கள் என்ன கொடுத்தோம் என்று உங்களுக்கு எப்படி தெரியும். நாங்கள் மனநிறைவுடன் தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறது. இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் என்ன பகிர்வு முறை கையாளப்பட்டதோ அதை பகிர்முறையிலேயே 2024 தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களில் இந்த கூட்டணி எவ்வளவு கட்டுக்கோப்பாக இருந்தது. அதேபோல் இந்த தேர்தலிலும் கட்டுக்கோப்பாக இயங்கி ஒட்டுமொத்த வெற்றியையும் பெற வேண்டும் என்கிற அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!