அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணைகளின் முதல் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஒரே ஏவுகணையில் பல்வேறு வெடிபொருட்களுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றி அடைந்ததாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ‘‘மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளால் பெருமை கொள்கிறேன்’’ என கூறி உள்ளார். அக்னி 1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் 700 கிமீ முதல் 3,500 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. அக்னி-5, சுமார் 5000 கிமீ தூரம் வரை செல்லக் கூடியது. இதன் மூலம் சீனாவின் வடக்கு பகுதி உட்பட முழு ஆசியாவையும் தாக்கும் எல்லைக்குள் கொண்டு வர முடியும்.

* ரூ.500 நோட்டு செல்லாதா? பரவிய வதந்தி
பிரதமர் மோடி நேற்று மாலை 5.30 மணிக்கு தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக மாலை 5 மணியளவில் செய்தி வெளியானது. இதனால், நாடு முழுவதும் பரபரப்பானது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு தொலைக்காட்சி அறிவிப்பின் மூலம்தான் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, கொரோனா கால ஊடரங்கு போன்ற நடவடிக்கைகளை மோடி அமல்படுத்தியிருந்தார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், ரூ.500, ரூ.200 செல்லாது. ரூ.100தான் அதிகபட்ச மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டாக இருக்கும் என்ற ஒரு அதிர்ச்சி அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியது. ஆனால், அறிவித்தபடி பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசவில்லை. அதே நேரத்தில், அக்னி-5 ஏவுகணை பற்றிய பிரதமரின் அறிவிப்பு டிவிட்டரில் வெளியானது. இதையடுத்து, ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் அறிவிக்க உள்ளதாக பரவியது வெறும் வதந்தி என்று நாடு முழுவதும் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு